2016-04-08 15:03:00

மியான்மாரில் மாணவர் கைதிகள் விடுதலை


ஏப்.08,2016. மியான்மாரில் அடுத்த வாரத்தில் சிறப்பிக்கப்படும் புத்தாண்டை முன்னிட்டு, ஏறக்குறைய 500 அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள, அந்நாட்டின் புதிய அரசு, இவ்வெள்ளியன்று அறுபதுக்கு மேற்பட்ட மாணவர் கைதிகளை விடுதலை செய்துள்ளது.

சிறையிலுள்ள மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் கைதிகளுக்கு விடுதலை வழங்குவது குறித்து, இவ்வியாழனன்று அறிவித்த, அந்நாட்டின் தேசிய சனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூ சி அவர்கள், அரசியல் காரணங்களுக்காகச் சிறையிலுள்ள கைதிகளுக்கு இவ்விடுதலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.

மியான்மார் சிறைகளில், ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்ட நூறு அரசியல் கைதிகள் உள்ளனர் என்றும், மேலும், ஏறக்குறைய 400 அரசியல் கைதிகளின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும், அரசியல் கைதிகளுக்கு உதவும் கழகம் அறிவித்துள்ளது. 

மியான்மாரில் புதிதாக உருவாக்கப்பட்ட அரச ஆலோசகர் என்ற பதவியை ஏற்றுக்கொண்டதற்குப் பின்னர், ஆங் சான் சூ சி அவர்கள் வழங்கிய முதல் உரையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, தனது நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்று என்று குறிப்பிட்டார்.

மியான்மாரின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர்கள், அரசியல் காரணங்களுக்காக பலரைக் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர்.

ஆதாரம் : Agencies/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.