2016-04-09 14:40:00

உயிர்ப்புக் காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


I              திருத்தூதர் பணிகள் 5: 27-32, 40-41

II            திருவெளிப்பாடு 5: 11-14

யோவான் நற்செய்தி 21: 1-19 

இளைஞர் ஒருவர் தன் மாத ஊதியத்திலிருந்து ஒரு கணிசமானத் தொகையை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கிவைப்பார். மாதத்தின் இறுதி ஞாயிறன்று, அருகில் உள்ள சேரியில் வாழும் சில சிறுவர்களை அழைத்துக்கொண்டு, நாள் முழுவதும் பல சுற்றுலா இடங்களுக்குச் செல்வார். மாலையில், ஒரு நல்ல உணவகத்திற்குச் சென்று, அனைவரும் சேர்ந்து விருந்து உண்பர். ஒரு நாள் அவர்கள் அவ்விதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அச்சிறுவர்களில் ஒருவன், இளைஞரை நோக்கி," அண்ணா, உங்க பேர் என்ன, ஜீசஸா?" என்று கேட்டான்.

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் நாள் முழுவதும் தங்களை மகிழ்வில் நிறைத்ததைக் கண்ட அந்தச் சிறுவனின் மனதில் எழுந்த அந்தச் சந்தேகம், இயேசுவுடன் மூன்றாண்டுகள் வாழ்ந்த சீடர்கள் மனதிலும் எழுந்தது. ஆனால், அவர்களால் கேட்க முடியவில்லை. "சீடர்களுள் எவரும், 'நீர் யார்?' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்." (யோவான் 21:12) என்று இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது.                                                 

ஒரு 'நாவலை' வாசிக்கும்போது அல்லது ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது இறுதி பக்கங்களில், அல்லது, இறுதி மணித்துளிகளில் வரும் 'கிளைமாக்ஸ்' நமது கவனத்தை அதிகம் ஈர்க்கும். நாவல் முழுவதும் நம் மனதில் தோன்றிய பல கேள்விகளுக்கு இறுதிப் பகுதியில் பதில்கள் கிடைக்கும். இன்று நமது ஞாயிறு வழிபாட்டில் வாசிக்கும் பகுதி, யோவான் நற்செய்தியில் வரும் உச்சகட்டம் - 'கிளைமாக்ஸ்' - என்று சொல்லலாம். உண்மையிலேயே, இது ஒரு பிற்சேர்க்கைதான்.

சில வேளைகளில் நாம் கடிதங்கள் எழுதும்போது இறுதியில் பி.கு. அதாவது பின்குறிப்பு என்று எழுதி, "ஓ, சொல்ல மறந்துட்டேனே..." என்று ஒரு மகிழ்வான செய்தியைச் சொல்வோமே, அந்தக் கண்ணோட்டத்தில், யோவான் நற்செய்தி 21ம் பிரிவை நாம் எண்ணி பார்க்கலாம்.

இந்தப் பிற்சேர்க்கையை நற்செய்தியாளர் யோவானோ அல்லது அவருடைய சீடர்களில் ஒருவரோ இணைத்துள்ளார் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. ஆய்வுக்கணிப்புக்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, நாம் ஆண்டவருக்கு நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், 21ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்த நிகழ்வு ஆழமான உண்மைகளை உள்ளத்தில் விதைக்கின்றது.

யோவான் தன் நற்செய்தியை, இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவாக எழுதாமல், ஓர் இறையியல் பாடமாக அளித்துள்ளார். இயேசுவின் கூற்றுகள், இயேசுவின் செயல்கள் அனைத்தும் யோவான் நற்செய்தியில் பல இறையியல் எண்ணங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்திப் பகுதியை ஒரு காட்சித் தியானமாக, ஓர் இறையியல் பாடமாக நாம் அணுகுவோம்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல் என்று யோவான் தன் அறிமுகத்தை ஆரம்பிக்கிறார். திதிம் என்ற தோமா என்று ஆசிரியர் குறிப்பிட்டதும், நம்மையும் அறியாமல் நமது நினைவில் சென்ற வாரம் ஞாயிறன்று சொல்லப்பட்ட நிகழ்வு நிழலாடுகிறது. அந்த நிகழ்வின் நாயகன் தோமா - சந்தேகத் தோமா. சந்தேகத்துடன் போராடி புண்பட்டிருந்த தோமாவை உயிர்த்த இயேசு சந்தித்து, குணமாக்கியதை சென்றவாரம் சிந்தித்தோம். அந்நிகழ்வின் ஒரு தொடர்ச்சிபோல, மற்றொரு குணமாக்குதல் நிகழ்வு இன்று சொல்லப்படுகிறது. இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுதலித்த பேதுருவை, உயிர்த்த இயேசு குணமாக்கும் நிகழ்வை இன்றைய நற்செய்தி சொல்கிறது.

கதாப்பாத்திரங்களின் அறிமுகத்திற்குப் பின், இன்றைய நற்செய்தி சொல்வது இதுதான்: "அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன்' என்றார். அவர்கள், 'நாங்களும் உம்மோடு வருகிறோம்' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை." (யோவான் 21: 3)

யூதர்களுக்கும், உரோமையர்களுக்கும் பயந்து, மேல் மாடியில் பூட்டிய அறைக்குள் பதுங்கியிருந்த சீடர்கள், தங்கள் பழைய வாழ்வுக்கேத் திரும்பிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, அவர்களது எண்ணங்களுக்கு ஒரு வடிவம் தந்ததுபோல் ஒலித்தது, பேதுருவிடமிருந்து வந்த யோசனை: "நான் மீன் பிடிக்கப் போகிறேன்".

 

மீன் பிடிப்பதை தங்கள் வாழ்வாகக் கொண்டிருந்த எளிய மனிதர்களை, "இனி நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" (மத். 4:19; மாற். 1:17; லூக். 5:10) என்று உறுதி அளித்து இயேசு அழைத்தார். அந்த அழைப்பைச் சரியாகப் புரிந்தும், புரியாமலும், தங்களுக்குப் பழக்கப்பட்ட தொழிலை விட்டுவிட்டு, ஏதோ ஒரு துணிச்சலுடன் இயேசுவின் அழைப்பை ஏற்று அவரைப் பின் சென்றவர்கள் சீடர்கள். இயேசு அவர்களுடன் இருந்தவரை, மக்களைப் பிடிக்கும் தொழிலை ஓரளவு புரிந்துகொண்டனர். ஆனால், கல்வாரியில் அவர் சிலுவையில் இறந்தபின் நிலைமை வெகுவாக மாறிவிட்டது. சீடர்கள் மக்களைப் பிடிப்பதற்குப் பதில், மக்கள் இவர்களைப் பிடித்து உரோமையர்களிடம் ஒப்படைத்து விடுவார்களோ என்ற பயத்தில்தான் அந்தச் சீடர்கள் பதுங்கி வாழ்ந்தனர். இயேசுவுடன் வாழ்ந்தபோது எப்போதும் மக்கள் கூட்டம் சூழ எதோ கனவுலகில் வாழ்ந்ததுபோல் இருந்தவர்களுக்கு, கடந்த மூன்று நாட்கள் கசப்பான பாடங்களைச் சொல்லித் தந்தன. எனவே, மக்களைப் பிடிக்கும் கனவுகளையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, மீண்டும் பழையபடி மீன்பிடிக்கும் தொழிலுக்கேத் திரும்பலாம் என்று தீர்மானித்தனர் சீடர்கள். பேதுருவின் அழைப்பு வந்ததுதான் தாமதம்... "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று அனைவரும் கிளம்பினர். கடந்த மூன்றாண்டுகள் இயேசுவுடன் அவர்கள் வாழ்ந்த அற்புதமான வாழ்வு இனி திரும்பப் போவதில்லை என்ற தீர்மானத்தில், பழைய பாதுகாப்பான வாழ்வைத் தேடிச்செல்லும் மீனவர்களாக அவர்கள் மாறிவிட்டனர். அந்தப் பழைய வாழ்வில் அவர்கள் முதலில் சந்திப்பது ஏமாற்றம். இரவு முழுவதும் முயன்றும், அவர்களுக்கு  'மீன் ஒன்றும் கிடைக்கவில்லை' (21: 3).

மீன்பிடித் தொழிலில் ஒன்றும் கிடைக்காமல் போன பல இரவுகளைச் சந்தித்தவர்கள் இந்தச் சீடர்கள். இருந்தாலும், அன்று திபேரியக் கடலில் இரவு முழுவதும் முயற்சிகள் செய்தும்,  ஒன்றும் கிடைக்காமல் போனது அவர்கள் மனதில் கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்வை நினைவுபடுத்தியிருக்கும். அந்த நிகழ்வுதானே அவர்கள் வாழ்வை முற்றிலும் மாற்றிய நிகழ்வு! லூக்கா 5ம் பிரிவில் (5:4-11) சொல்லப்பட்டுள்ள அந்த நிகழ்விலும் அவர்கள் இரவெல்லாம் உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. அவர்கள் வாழ்வில் அடிக்கடிச் சந்தித்துப் பழகிப்போன அந்த ஏமாற்றத்தை அவர்கள் மறக்க முடியாத ஓர் அனுபவமாக இயேசு அன்று மாற்றினார். எனவேதான், இந்த இரவிலும் அந்த நாள் நினைவு அவர்களுக்கு மீண்டும் எழுகிறது.

இயேசுவின் மரணம் என்ற பெரும் எமாற்றத்திற்குப் பின், தங்கள் பழைய வாழ்வைத் தொடரலாம் என்று எண்ணியவர்களுக்கு, ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது. அந்த ஏமாற்றம் மீண்டும் அவர்கள் வாழ்வைப் புரட்டிப்போட்ட ஒரு மாற்றமாக அமைந்தது. கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்ததைப்போலவே மீண்டும் ஒருமுறை திபேரியக் கடலில் நிகழ்ந்தது. இரவு முழுவதும் உழைத்துக் காணாத பலனை விடிந்ததும் இயேசுவின் வடிவில் அவர்கள் கண்டனர். 153 பெரிய மீன்கள் பிடிபட்டதாக நற்செய்தியாளர் கூறுகிறார். (யோவான் 21:11)

கெனசரேத்து ஏரியிலும், திபேரியக் கடலிலும் நடந்த இரு நிகழ்வுகளையும் இணைத்துச் சிந்திக்கும்போது, சீமோன் பேதுருவுக்கும், இயேசுவுக்கும் இடையே உருவான உறவில் ஒரு புதிய ஆழம் புலனாகிறது. இவ்விரு நிகழ்வுகளின் இணைப்பு நம் வாழ்விலும் ஒரு சில பாடங்களைச் சொல்லித் தரக் காத்திருக்கிறது.

கெனசரேத்து ஏரியில் கிடைத்த அபரிமிதமான மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, என்னைவிட்டுப் போய்விடும்" (லூக்கா 5: 8) என்று வேண்டினார். திபேரியக் கடலில் அபரிமிதமான மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு தண்ணீரில் பாய்ந்து செல்கிறார் இயேசுவை நோக்கி.

கெனசரேத்து ஏரியில் தான் ஒரு பாவி என்பதை பேதுரு உணர்ந்து சொன்னாரா என்பதில் தெளிவில்லை, ஆனால், இயேசு தன்னை விட்டு விலகவேண்டும் என்பதைத் தெளிவாக உணர்ந்தார்.

திபேரியக் கடலில் மீன்பிடிக்க வருவதற்கு முன் தான் எவ்வளவு பெரிய பாவி என்பதை பேதுரு நன்கு உணர்ந்திருந்தார். இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுத்த பாவி தான் என்பதை நன்கு உணர்ந்திருந்த பேதுரு, இம்முறை இயேசுவை விட்டு விலகிச் செல்ல எண்ணாமல், இயேசுவை நோக்கிச் செல்கிறார்.

நம் வாழ்வைச் சிறிது அலசிப் பார்ப்போம். பிரமிப்பூட்டும் ஓர் அற்புதம் நம்மைச் சூழும்போது, எதிர்பாராத அளவில் ஒரு பேரன்பு அனுபவம் நமக்கு ஏற்படும்போது, ஒன்று, அந்த அன்புக்கு முன் முற்றிலும் சரணடைந்து மகிழ்வோம். அல்லது, அந்த அன்பைக் கண்டு பயந்து, நமக்குள் நாமே ஒளிந்து கொள்வோம். அந்த அன்பு நம்மை விட்டு விலகினால் போதும் என்று எண்ணுவோம். அப்படி நமக்குள் நாமே ஒளியும்போது, கூடவே நம்மைப் பற்றிய தாழ்வான எண்ணங்களும் நம்மை நிரப்பி, சுய பரிதாபத்தில் (self-pity) நம்மை மூழ்கடிக்கும். கெனசரெத்து ஏரியில் பேதுரு பெற்றது இத்தகைய அனுபவம். அங்குதான் இயேசுவின் அன்புப்பாடங்கள் அவருக்கு ஆரம்பமாயின.

இயேசுவுடன் வாழ்ந்த மூன்று ஆண்டுகளில், பேதுரு கற்றுக்கொண்ட ஓர் உயர்ந்த பாடம், இதுதான். எந்த நிலையில் தான் இருந்தாலும், இயேசுவிடம் தனக்குப் புகலிடம், தஞ்சம் உண்டு என்பதே அந்த அழகிய பாடம். இந்த ஒரு பாடத்தை நாம் கற்றுக் கொண்டால் நமக்கு மீட்பு உண்டு, வாழ்வு உண்டு. எந்த நிலையில் நாம் இருந்தாலும், இயேசுவை நாம் அணுகிச் செல்லமுடியும். தந்தையாம் இறைவனில் நாம் தஞ்சம் அடையமுடியும். இரவெல்லாம் உழைத்தும், பயனேதும் காணாமல் களைத்து, சலித்துப்போன சீடர்களுக்கு, உயிர்த்த இயேசு, ஒரு தாயின் கனிவோடு, காலை உணவைத் தயாரித்து, பரிமாறினார். பசியிலும், களைப்பிலும் பரிதவிக்கும் மனிதகுலம், உயிர்த்த இயேசுவின் இரக்கத்தையும், அரவணைப்பையும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் முழுமையாக உணரவேண்டும் என மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.