2016-04-12 16:20:00

இயேசுவின் கல்லறையைச் சீரமைப்பதற்கு, ஜோர்டன் அரசர் உதவி


ஏப்.12,2016. எருசலேம் நகரில் அமைந்துள்ள திருக்கல்லறை ஆலயத்திலுள்ள இயேசுவின் கல்லறையைச் சீரமைப்பதற்கு, ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா அவர்கள் நிதியுதவி அளிப்பதற்குத் தீர்மானித்துள்ளார்.

ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா அவர்களின் இத்தீர்மானத்தை மகிழ்வோடு வரவேற்றுப் பேசியுள்ள, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் வில்லியம் ஷோமாலி அவர்கள், திருக்கல்லறை அனைத்துக் கிறிஸ்தவ சபையினருக்கும் மிகவும் புனிதமான இடமாக இருப்பதால், இத்தீர்மானம் உயரிய அடையாளப் பண்பாக உள்ளது என்று கூறினார்.

ஜோர்டன் அரசர் அலுவலகம், அரசரின் இத்தீர்மானத்தை, எருசலேம் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 3ம் தெயோபிலோஸ் அவர்களுக்கு அறிவித்துள்ளது.

எருசலேமிலுள்ள இயேசுவின் திருக்கல்லறை, 1947ம் ஆண்டுக்குப் பின்னர் சீரமைக்கப்படவில்லை என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் அலுவலகம் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.