2016-04-13 15:29:00

இது இரக்கத்தின் காலம்... – ஞானத்தை எங்கும் தேடாதே!


ஒரு பெரிய பணக்காரர் தன் பெரிய மாளிகையில், மனைவி, குழந்தைகளுடன் எந்த ஒரு குறையுமின்றி மகிழ்வாக வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் மனம், மிகவும் நிம்மதியிழந்து இருந்தது. அதனால் அவர் ஞானத்தைத் தேடிப் புறப்பட்டார். தன் குதிரையில் பல ஊர்களுக்குச் சென்று பல துறவிகள், ஞானிகள் மற்றும் குருக்களைச் சந்தித்து, அவர்கள் கால்களில் தங்கத்தையும், வைரத்தையும் வைத்து, தனக்கு ஞானம் தருமாறு வேண்டினார். இருப்பினும் அவர்களால் அவருக்கு ஞானத்தைத் தரமுடியவில்லை. அப்போது அவரிடம் அந்த வழியாக வந்த ஒருவர், இந்தக் காட்டின் உட்பகுதியில் ஒரு குகையில் ஜென் குரு வாழ்ந்து வருகிறார். அவரிடம் நீங்கள் சென்று உங்கள் பிரச்சனையைச் சொன்னால், அவர் கண்டிப்பாகத் தீர்த்து வைப்பார் என்று கூறினார். ஒரு மூட்டை நிறையப் பணத்தை எடுத்துக் கொண்டு, அந்த காட்டின் உட்பகுதியில் அந்த குருவைத் தேடிச் சென்றார் இவர். எப்படியோ நீண்ட நாள் அலைச்சலுக்குப் பிறகு, அந்தக் குருவின் குகையைக் கண்டுபிடித்து, அவரை வணங்கி தன் பிரச்சனையைக் கூறினார். பின் அந்த குரு அவரிடம், "நீ இங்கே எப்படி வந்தாய்" என்று கேட்டார். அதற்கு அவர், "குதிரையில்!" என்றார். பின் அவர், "அப்படியென்றால் எதற்கு ஞானத்தைத் தேடுகிறாய், முதலில் உன் குதிரையைத் தேடு!" என்று கூறினார். உடனே பணக்காரர் அவரிடம், "என்ன குருவே, முட்டாள் தனமாக பேசுகிறீர்கள், என்னிடம்தான் குதிரை இருக்கிறதே, பின் எதற்கு நான் தேட வேண்டும்" என்று சொன்னார். பிறகு குரு சொன்னார், "எப்படி உன்னிடம் குதிரை இருக்கிறதோ, அதேபோல்தான் ஞானமும் உன்னிடமே இருக்கிறது. ஆகவே அதைத் தேடி வெளியே செல்லாமல், உனக்குள்ளேயே தேடித் தெரிந்துக்கொள்" என்று கூறி, குகைக்குள் சென்று தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.