2016-04-14 16:35:00

ஆஸ்ட்ரிய எல்லைக் கட்டுப்பாட்டிற்கு திருஅவை கவலை


ஏப்.14,2016. ஈராக், சிரியா போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயரும் மக்கள் நாட்டுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ஆஸ்ட்ரிய நாடு, இத்தாலி எல்லையிலுள்ள Brennerல், தடுப்புகளைக் கட்டுவதற்குத் தீர்மானித்திருப்பதைக் குறை கூறியுள்ளனர் திருஅவைத் தலைவர்கள்.

தட்டுவோரை வரவேற்பதற்குப் பதிலாக, இவ்வாறு தடுப்புகளை அமைக்கத் திட்டமிடுவது குறித்து குறைகூறியுள்ள, இத்தாலியின் வெனிஸ் முதுபெரும் தந்தை Francesco Moraglia அவர்கள், தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் புலம்பெயர்ந்தவர்களைத் தடுப்பதற்கு, ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தினர் இவ்வாறு தீர்மானித்திருப்பது பலவீனத்தின் வெளிப்பாடு என்று கூறியுள்ளார். 

ஆஸ்ட்ரியத் தடுப்புத் திட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ள, Bolzano-Bressanone ஆயர் Ivo Muser அவர்கள், எல்லையில் வேலிகள், தீவிரத் தேசப்பற்று, தன்னிலிருந்து மற்றவரைப் பிரித்துப் பார்ப்பது போன்றவை, நம் அறிவிலும், இதயங்களிலும் அச்சத்தையும், தடைகளையும் தூண்டிவிடும் என்று எச்சரித்துள்ளார். 

ஆதாரம் : CCN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.