2016-04-15 15:33:00

உரையாடல் விளம்பரத்திற்காக அல்ல, தாய்லாந்து ஆயர்


ஏப்.15,2016. சமுதாயத்தில், நம்மைப் பிரிக்கும் காழ்ப்புணர்வையும், முற்சார்பெண்ணச் சுவர்களையும் தகர்த்து, மேலும் உறுதியான பாலங்களைக் கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று, தாய்லாந்து தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார். 

இவ்வாரத்தில், பாங்காக் இஸ்லாமிய மையத்தில், புதிய மசூதி திறப்பு விழாவிலும், இஸ்லாமியத் தலைவர்களுடன் அங்கு நடைபெற்ற கருத்தரங்கிலும் கலந்து கொண்டு உரையாற்றிய, தாய்லாந்து ஆயர் பேரவையின் உதவிப் பொதுச் செயலர் ஆயர் Andrew Thanya Vissanu Anan அவர்கள், இவ்வாறு கூறினார்.

இஸ்லாமியத் தலைவர்களுடன் அமைதி ஊர்வலத்திலும் கலந்து கொண்ட  ஆயர் Vissanu அவர்கள், மதங்களிடையே நிலவும் வேறுபாடுகள், மோதல்களுக்குக் காரணமாக அமையக் கூடாது என்று கூறினார்.

93 விழுக்காட்டினர் புத்த மதத்தினராக உள்ள தாய்லாந்து நாட்டில், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் பங்கு பற்றியும், பல்சமய உரையாடல் பற்றியும், ஆழமான கருத்துக்களை முன்வைத்த ஆயர் Vissanu அவர்கள், பல கலாச்சார மற்றும் பல சமயத்தவரைக் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது இயலக்கூடியதே என்றும் கூறினார்.

மதங்கள் மற்றும் மரபுகளுக்கு இடையே நிலவும் வேறுபாடுகள், சண்டைகளுக்குக் காரணமாக அமையக் கூடாது என்றும், அனைத்து மதத்தவரும் அமைதிக்கான தாகத்தைக் கொண்டிருப்பது அவர்களின் கடமை என்றும் உரையாற்றினார் தாய்லாந்து ஆயர் Vissanu. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.