2016-04-19 16:06:00

திருத்தந்தை அழைத்து வந்த சிரியா அகதிகளின் மகிழ்ச்சி


ஏப்.19,2016. கிரேக்கத்தின் லெஸ்போஸ் தீவிலிருந்து திருத்தந்தையுடன் இத்தாலி வந்து அடைக்கலம் பெற்றுள்ளதை ஓர் இறையாசீராக நோக்குவதாக அறிவித்துள்ளனர், திருத்தந்தையுடன் விமானத்தில் வந்த மூன்று அகதிக் குடும்பத்தினர்.

சிரியாவிலிருந்து தப்பி ஓடி, துருக்கி வழியாக கிரேக்கத்தின் தீவை அடைந்த அகதி மக்களுள் மிகவும் துன்பத்திற்குள்ளாகியுள்ள மூன்று குடும்பங்களுக்கு இரக்கத்தின் ஓர் அடையாளமாக இத்தாலியில் அடைக்கலம் வழங்க திருத்தந்தை விரும்பியதைத் தொடர்ந்து, 12 பேர் அடங்கிய இந்த மூன்று இஸ்லாமியக் குடும்பங்களும் திருத்தந்தையுடன் விமானத்தில் இத்தாலிக்கு கொணரப்பட்டு, கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனமான சான் எஜிதியோ அமைப்பின் பொறுப்பில் விடப்பட்டுள்ளனர்.

திருத்தந்தையின் இந்தக் கருணைச்செயல் குறித்து தன் நன்றியை வெளியிட்ட இந்த 12 பேரில் ஒருவரான ஒசாமா என்பவர், அமைதிக்கு மதங்கள் எதுவும் இல்லை, நாமனைவரும் மனிதர்கள், மனிதாபிமானம் நிறைந்தவர்கள் என்பதையே இது காண்பிக்கிறது என்றார்.

ஹாசன் மற்றும் நூர் தமபதியினர் இது பற்றி குறிப்பிடுகையில், ஒவ்வொரு மதத்தலைவரும் திருத்தந்தையைப்போல் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஈடுபடவேண்டும் என்றனர்.

தாங்கள் இஸ்லாமியராக இருந்தபோதிலும், இஸ்லாமியத் தலைவர்கள் இத்தகைய பரிவுடன் தங்களை அணுகவில்லை எனவும் கவலையை வெளியிட்டனர் அத்தம்பதியர்.

இதற்கிடையே, தான் ஆற்றியுள்ள இச்செயல் கடல் போன்ற உலகத் தேவைகளின்முன் ஒரு சிறு நீர்த்துளியே எனினும், இத்துளியைப் பெற்றபின், கடல் இப்போதுபோல் இருக்காது என அன்னை தெரேசா ஒருமுறை வழங்கிய பதிலையே தற்போது அகதிகளுடன் விமானத்தில் வரும்போதும் பத்திரிகையாளர்களிடம் கூறினார் திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.