2016-04-20 15:47:00

அமைதி ஆர்வலர்கள் : 2012ல் நொபெல் அமைதி விருது (EU)


ஏப்.20,2016. 2012ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது, European Union எனப்படும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டது. ஐரோப்பாவில், அமைதி, ஒப்புரவு, சனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்காக, அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பிய ஒன்றியம் ஆற்றியுள்ள அருஞ்சேவைகளைப் பாராட்டி, அப்பணிகளை ஊக்குவிக்கும் விதமாக, இவ்விருது வழங்கப்படுவதாக, நார்வே விருதுக் குழு அறிவித்தது. அமைதியான சூழலில் வளர்வதற்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் இடங்களில் வாழும் சிறார்க்கு, இந்த விருது நிதி செலவழிக்கப்படும் என்று அந்த ஒன்றியம் அறிவித்தது. EU எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில், சுதந்திரமும், இறையாண்மையுள்ள 28 நாடுகள் உறுப்புகளாக உள்ளன. ஓர் அரசியல்-பொருளாதார அமைப்பாக உள்ள இந்த ஒன்றியம், ஐம்பது கோடியே எண்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டுள்ளது. இது, உலக மக்கள் தொகையில் 7.3 விழுக்காடாகும். 2014ம் ஆண்டில், இதன் உற்பத்தி, உலகின் மொத்த உற்பத்தியில் ஏறக்குறைய 24 விழுக்காடாக இருந்தது. இதன் 28 உறுப்பு நாடுகளுள், 26ல், மனித வளர்ச்சி குறியீடு மிகவும் உயரியதாகவே உள்ளது என, ஐ.நா.வின் UNDP வளர்ச்சித் திட்ட அமைப்பு கூறியது.

ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய அவை, ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய தணிக்கையாளர்கள் நீதிமன்றம் என்ற பிரிவுகளாக இது செயல்படுகின்றது.  தனது உறுப்பு நாடுகளின் மக்கள், பொருள்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டுப்பாடற்ற நகர்வுகளுக்கு உறுதியளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒரே சந்தை அமைப்பு முறையை இது கொண்டுள்ளது. பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் ஆகியவைகளுடன், நாடுகளின் வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. 1999ம் ஆண்டில் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறை உருவாக்கப்பட்டு, 2002ம் ஆண்டில், அது முழுமையாக அமலுக்கு வந்தது. இந்த யூரோ நாணய முறையை, 19 உறுப்பு நாடுகள், சட்ட முறைப்படி பயன்படுத்தி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் இருபத்து நான்கு மொழிகளை அதிகாரப்பூர்வ மற்றும் தொழில் மொழிகளாக கொண்டுள்ளது. முக்கியமான ஆவணங்கள், அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தாய்மொழியாகப் பேசுபவர்கள் மற்றும் இரண்டாம் மொழியாக பேசுபவர்கள் என்று, அனைவரையும் கணக்கில் எடுத்தால், ஆங்கிலம் பேசுவோர் 51 விழுக்காடாகும். 1979ம் ஆண்டில், ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடைபெறுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் உருவான வரலாறு, ECSC என்ற ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகிரும்பு குழுவோடு(European Coal and Steel Community) தொடர்புடையது.  இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே இடம்பெற்ற ஒப்புரவு நடவடிக்கை, ஐரோப்பாவில், அமைதியைப் பாதுகாத்து ஊக்குவிப்பதற்கு முக்கியமானதாக இருந்தது. ஏனெனில், இவ்விரு நாடுகளும், எழுபது ஆண்டுகள் இடைவெளியில் தங்களுக்கிடையே மூன்று போர்களை நடத்தியுள்ளன. ஆயினும், ஐரோப்பியக் கண்டத்திலுள்ள நாடுகளை ஒன்றிணைப்பதற்காக, ஜெர்மனியும் பிரான்சும், மற்ற நான்கு நாடுகளுடன் சேர்ந்து, 1951ம் ஆண்டில், பாரிசில் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டு, ECSC குழுவை உருவாக்கின. இக்குழுவில், பெல்ஜியம், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லான்ட்ஸ், லக்சம்பர்க் ஆகிய ஆறு நாடுகள் முதலில் கையெழுத்திட்டன. ஐரோப்பிய நாடுகளுக்குள் பொதுவான நிலக்கரி மற்றும் இரும்புச் சந்தை உருவாக்கப்படவும், இயற்கை வளங்கள் குறித்த போட்டிகளை இந்நாடுகளுக்குள் சமநிலைப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழியமைத்தது. 1950ம் ஆண்டு, மே 9ம் தேதி, அப்போதைய ப்ரெஞ்ச் வெளியுறவு அமைச்சர்  Robert Schuman அவர்கள், ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே, போர்கள் மேலும் தொடராமல் இருப்பதைத் தவிர்க்கும் நோக்கத்தில் இந்த ECSC குழு உருவாக்கப்பட வேண்டிய பரிந்துரையை முன்வைத்தார். போர்களை நடத்துவது நினைத்துப் பார்க்க இயலாதது மட்டுமல்ல, பொருளாதார முறையிலும் இயலாதது என்று தனது நோக்கத்தை அறிவித்தார் Schuman. ECSC குழு, ஒரு நாட்டின் அதிகாரம் மற்றும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் பன்னாட்டு நிறுவனமாகும். இந்த ECSC குழுவும், 1957ம் ஆண்டின் உரோம் ஒப்பந்தமுமே ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்படக் காரணமானது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே, ஒரு வெளியுறவுக் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை போந்றவற்றிலும், பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நேட்டோ(NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு, உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்பு உண்டு. Schengen ஒப்பந்தத்தின்கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை எடுப்பதில் அரசுகளுக்கு இடையே இணக்கம், அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையை இது கையாள்கிறது. 2012ம் ஆண்டுக்கான நொபெல் அமைதி விருதை, ஐரோப்பிய ஒன்றிய அமைப்புப் பெற்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.