2016-04-20 16:26:00

மியான்மார் கைதிகள் விடுதலை, ஐ.நா. வரவேற்பு


ஏப்.20,2016. மியான்மாரில் அரசுத்தலைவரின் பொது மன்னிப்பின்பேரில், 83 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வரவேற்றுள்ளார்.

இம்மாதம் 8ம் தேதி 199 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக, அந்நாட்டின் புத்தாண்டு தினத்தில், 83 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், உக்ரைன் நாடும், இரஷ்யாவும் கைதிகளை விடுதலை செய்வதற்கு இசைவு தெரிவித்துள்ளன என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இரஷ்யாவில் 22 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவிக்கும், உக்ரைன் நாட்டு விமான ஓட்டுனர் Nadezhda Savchenko அவர்களின் விடுதலைக்கு, உக்ரைன் அரசுத்தலைவர் Petro Poroshenko அவர்களிடம் உறுதியளித்துள்ளார், இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin.

பயங்கரவாதம் உட்பட, பல்வேறு குற்றங்களுக்காக, இரு இரஷ்ய சிறப்புப் படைவீரர்களை, உக்ரைன் நாடு, 14 ஆண்டுகள் தண்டனை வழங்கி, சிறையில் வைத்ததைத் தொடர்ந்து, நாட்டுக்கு மிகுந்த ஆபத்தை வருவிக்கக்கூடிய கைதிகளைப் பரிமாற்றம் செய்வது குறித்து இவ்விரு நாடுகளின் அரசுத்தலைவர்களும், தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர். 

உக்ரைனில், இரஷ்யாவுக்கு ஆதரவாகப் போரிடும் புரட்சியாளர்களுடன் Yevgeny Yerofeyev, Alexander Alexandrov ஆகிய இரு படைவீரர்களும் சேர்ந்து செயல்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டு, உக்ரைன் நாடு, இவ்விருவருக்கும் 14 ஆண்டுகள் தண்டனை வழங்கியது.

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.