2016-04-26 13:38:00

அபூர்வ நோய்களுக்கு, மூல உயிரணு சிகிச்சைகள் கருத்தரங்கு


ஏப்.26,2016. மனித உயிரணுக்கள், திசுக்கள் மற்றும் உடல் உறுப்புக்களை மீண்டும் உருவாக்குவது, மாற்றுவது போன்றவை குறித்த, பன்னாட்டு மருந்துகள் கருத்தரங்கு ஒன்றை, திருப்பீட கலாச்சார அவையும், மூல உயிரணு வாழ்வு அமைப்பும் இணைந்து இவ்வாரத்தில் நடத்தவுள்ளன.

ஏப்ரல் 28, வருகிற வியாழனன்று தொடங்கும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில், இத்தகைய மருத்துவத்தின் கலாச்சாரத் தாக்கங்கள் குறித்த கருத்துக்கள் பரிமாறப்படும். மேலும், இக்கருத்தரங்கில், நோய்களைக் குணமாக்குவதற்கு, உயிரணுக்கள் சிகிச்சைகள் குறித்தும், அதன் வழியாக, உலகின் துன்பங்களை அகற்றுவது குறித்தும், உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள், இக்கருத்தரங்கின் பகிர்வுகளுக்குத் தலைமை தாங்குவார்கள். எதிர்ப்பு சக்தியை இழந்த புற்றுநோய்களுக்கும், அபூர்வ நோய்களுக்குமென, முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மூல உயிரணு சிகிச்சைகள் தற்போது ஆய்வு நிலையில் உள்ளன.

இக்கருத்தரங்கு பற்றிக் கூறிய, திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ரவாசி அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மனிதரின் நோய்களைக் குணப்படுத்துவது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, அனைத்துச் சமுதாயத்திற்கும் அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.