2016-04-26 12:43:00

செர்னோபில் அணுமின் நிலைய விபத்து, 30ம் ஆண்டு


ஏப்.26,2016. செர்னோபில் அணுமின் நிலைய விபத்து ஏற்பட்டதன் முப்பதாம் ஆண்டு இச்செவ்வாயன்று உக்ரைன் நாட்டில் நினைவு கூரப்பட்டது.

முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்திருந்த மற்றும் இக்காலத்தில் உக்ரைனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி ஏற்பட்ட விபத்தில், இறந்தவர்களின் எண்ணிக்கை இன்றும் சரியாகக் கணிக்கப்படவில்லை. ஆயினும், நான்காயிரம் பேர் இறந்தனர் என்று, 2005ம் ஆண்டில் ஐ.நா. கூறியிருந்தது. வரலாற்றில் மிக மோசமான விபத்து என்று சொல்லப்படும் இதன் பாதிப்பு, இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

செர்னோபில் அணுமின் நிலையத்தில், நான்கு அணு உலைகள் இருந்தன. அவற்றில் ஒன்றின் நீர்குளிர்வு சாதனம் செயல்படாததன் காரணமாக, வெப்பம் அதிகரித்து, அணு உலையின் மையம் உருக ஆரம்பித்தது. 1986, ஏப்ரல் 26 அன்று அதிகாலை 1.23 மணியளவில், இவ்விபத்து ஏற்பட்டது. ஏறத்தாழ 20 வகையான கதிர்வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் புகுந்தன. இக்கதிர் வீச்சுப் பொருள்கள் அங்கிருந்த நிலத்தில் விழுந்து சிதறின. இந்தக் கதிரியக்க வீழ் பொருள்கள், பத்து ஹிரோஷிமா குண்டுகளுக்கு சமமானதாக கருத்தப்படுகின்றன. 

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி   








All the contents on this site are copyrighted ©.