2016-04-27 15:54:00

நாம் எல்லாரும் பொதுநிலையினராகவே திருஅவையில் நுழைந்தோம்


ஏப்.27,2016. நம்மில் எவருமே ஆயராகத் திருஅவைக்குள் நுழையவில்லை, மாறாக, பொதுநிலையினராகவே திருஅவையில் நுழைந்தோம் என்று சொல்லி, திருஅவையில் குருகுலத்தை மையமாக வைக்கும் போக்கை எச்சரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையில் பொதுநிலையினரின் பங்கு குறித்த சிந்தனைகளை, நீண்ட கடிதமாக, திருப்பீட இலத்தீன் அமெரிக்க ஆணையத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்களுக்கு எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குருகுலத்தார், பொதுநிலையினருக்குப் பணியாற்ற வேண்டும் மற்றும் அவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

“இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பொது வாழ்வில், பொதுநிலை விசுவாசிகளின் தவிர்க்க இயலாத பங்கு” என்ற தலைப்பில், கடந்த மார்ச் மாதத்தில், வத்திக்கானில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மேலும் பல சிந்தனைகளை, இம்மடல் வழியாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இலத்தீன் அமெரிக்கத் திருஅவையை, பெரிதாகப் பாதிப்பவைகளில், குருகுலத்தை மையமாக வைக்கும் போக்கும் ஒன்று என, குருக்கள் மற்றும் அர்ப்பண வாழ்வு வாழ்வோருக்கு நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குருகுலத்தார், பொதுநிலை விசுவாசிகளுக்குப் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் எல்லாருமே பொதுநிலையினராகவே திருஅவையில் நுழைந்தோம் என்றும், திருஅவை, குருக்கள், ஆயர்கள், துறவறத்தார் ஆகிய உயர்ந்தோர் குழுவின் திருஅவை அல்ல என்றும், நாம் எல்லாருமே, விசுவாசிகள் மற்றும் இறைவனின் தூய மக்களால் ஆனவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.