2016-04-28 16:27:00

சுற்றுச்சூழல் சீரழிவு இந்தியாவில் அதிகம்-கர்தினால் கிரேசியஸ்


ஏப்ரல்,28,2016. இந்தியாவில் உருவாக்கப்படும் சுற்றுச்சூழல் சீரழிவின் தாக்கங்களால் வறியோரே மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று, மும்பை பேராயர், கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ் அவர்கள் விடுத்துள்ள ஒரு செய்தி கூறுகிறது.

பாரிஸ் மாநகரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உலகத் தலைவர்கள் உடனடியாக செயல்முறைப் படுத்தவேண்டும் என்று 260 மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகில் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்துள்ள பத்து நகரங்களில் 6 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்றும், 7 கோடியே, 60 இலட்சம் மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி தவிப்பதும் இந்தியாவில் காணப்படுகிறது என்றும் கர்தினால் கிரேசியஸ் அவர்களின் செய்தி கூறுகிறது.

நிலத்தடி படிம எரிபொருளுக்குப் பதில், இயற்கையில் புதுப்பிக்கப்படக் கூடிய சக்திகளைப் பயன்படுத்தும் முயற்சிகளில், உலக அரசுகள், 2050ம் ஆண்டுக்குள் முழுவதும் ஈடுபடவேண்டும் என்பதை, இந்த விண்ணப்பம் வலியுறுத்துகிறது.

சுற்றுச்சூழல் சீரழிவுக்குக் காரணமாக இல்லாத வறியோர், இந்தச் சீரழிவினால் பெரும் ஆபத்துக்களைச் சந்திக்கவேண்டியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நம் பொதுவான இல்லமான பூமியைக் காப்பது குறித்து திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களை ஒவ்வொருவரும் வாசித்து, பயனடையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

டில்லி போன்ற மாநகரங்களில் காற்று மாசுபாட்டைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பாராட்டுக்குரியன என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இன்னும் மிக அதிகமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.