2016-04-29 15:10:00

திருத்தந்தையின் சுற்றுச்சூழல் அழைப்புக்கு இந்திய பதிலிறுப்பு


ஏப்.29,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடல் வெளியிடப்பட்டு ஏறக்குறைய ஓராண்டு ஆகியுள்ளவேளை, இந்தியாவிலுள்ள மறைமாவட்டங்களும், திருஅவை நிறுவனங்களும் அத்திருமடலை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன.

மரங்கள் நடுதல், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்தல், மின்சக்தி தயாரிக்கும் சூரிய ஒளித் தகடுகளை அமைத்தல், அன்றாட வாழ்வில் சுற்றுச்சூழலோடு நட்போடு வாழ்தல் என, பல்வேறு திட்டங்களை அமல்படுத்த ஆரம்பித்துள்ளனர் கத்தோலிக்கர்.

இந்நடவடிக்கை குறித்துப் பேசிய, இந்தியத் திருஅவையின் சமூகநல அமைப்பான காரித்தாஸ் நிறுவனத் தலைவர் அருள்பணி ப்ரெட்ரிக் டி சூசா அவர்கள், திருத்தந்தை ஏதாவது கூறும்போது, அதைக் கத்தோலிக்கர், ஒரு கட்டளையாக ஏற்று, எழுத்திலும், உணர்விலும் செயல்படுத்த விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வுத் திட்டங்களை, ஏறத்தாழ ஒவ்வொரு மறைமாவட்டமும், பங்குகளும் ஆற்றி வருகின்றன என்றும் தெரிவித்தார் அருள்பணி டி சூசா. 

கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Laudato si' அதாவது, 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலில், சுற்றுச்சூழலை, வேகமாக அழித்துவரும் மனிதரின் நடவடிக்கைகள் குறித்த தனது கவலையை வெளியிட்டிருக்கிறார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.