2016-05-02 15:16:00

ஐ.எஸ். தீவிரவாதிகளின் இனப்படுகொலைகளைத் தடுக்க விண்ணப்பம்


மே,02,2016. சிரியாவிலும், ஈராக்கிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தும் படுகொலைகளை, இனப்படுகொலைகள் என அறிவிக்கவேண்டும் என்று, 4 இலட்சம் பேர் கையெழுத்திட்ட விண்ணப்பம் ஒன்று ஐ.நா. அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிலும், சிரியாவிலும் வாழும் மத சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று ஐ.நா. அவையிடம் விண்ணப்பிக்கும் இந்த மனுவில், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

சிரியாவிலும், ஈராக்கிலும், இஸ்லாமியத் தீவிரவாதிகளால் மதச் சிறுபான்மையினர் கொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுக்கும் இம்மனு, இந்தப் படுகொலைகளை இனப்படுகொலைகளாக அறிவிக்குமாறு, ஐ.நா. பாதுகாப்பு அவையை, ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்துமாறும் விண்ணப்பித்துள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ள மக்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கும், அப்பகுதியிலிருந்து கடத்தப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள், மற்றும் Yazidi இனப் பெண்களும் சிறுவர், சிறுமியரும் விடுவிக்கப்படுவதற்கும் ஐ.நா. நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இந்த மனுவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், கத்தோலிக்க மதத் தலைவர்களுடன், பல மதத் தலைவர்களும் கையொப்பமிட்டுள்ளனர். 

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.