2016-05-03 15:20:00

இந்தோனேசிய தேசிய ஒற்றுமைக்குச் செபமாலை


மே,03,2016. இந்தோனேசியாவின் தேசியக் கொடியை, சிவப்பு மற்றும் வெண்மை நிறச் செபமாலை மணிகளால் அழகுபடுத்தி, அந்நாட்டின் ஒற்றுமைக்காக, இந்த மே மாதத்தில், செபமாலை செபிக்கும் புதிய முயற்சி ஒன்றை, ஜகார்த்தா உயர்மறைமாவட்டம் தொடங்கியுள்ளது.

இந்தோனேசியாவில் ஒற்றுமை ஏற்படுவதற்காக, கத்தோலிக்கர் செபமாலை செபிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தி இந்நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது  ஜகார்த்தா உயர்மறைமாவட்டம்.

இந்தோனேசியாவின் தேசியக் கொடியின் நிறங்களை நினைவுபடுத்துவதற்கும், அந்நாட்டின் பஞ்சசீலக் கொள்கை அமல்படுத்தப்படுவதை வலியுறுத்துவதற்கும், சிவப்பு மற்றும் வெண்மை நிற மணிகளாலானச் செபமாலையைத் தேர்ந்தெடுத்ததாக, ஜகார்த்தா உயர்மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணையத் தலைவர் அருள்பணி Hieronymus Sridanto Aribowo அவர்கள் தெரிவித்தார்.

இந்தோனேசியத் தேசியக் கொடியின் சிவப்பு நிறம், உண்மையைப் பாதுகாக்கும் துணிச்சலையும், வெண்மை நிறம், நேர்மையையும் குறிக்கின்றன.

ஜகார்த்தா உயர்மறைமாவட்டத்தின் 65 பங்குகளில், தேசிய ஒற்றுமைக்காக, மே முதல் தேதியிலிருந்து, சிவப்பு-வெண்மை நிற செபமாலை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.