2016-05-04 16:15:00

இது இரக்கத்தின் காலம் : ஏமாற்றத்திலிருந்து வருவது கோபம்


பாங்கே (Bankei) என்ற ஜென் துறவியிடம் ஒரு ஜென் மாணவர் சென்று, குருவே, என்னிடம் அடக்க முடியாத கோப உணர்வு இருக்கிறது. அதை நான் எப்படிச் சரி செய்வது? என்று கேட்டார். அதற்கு துறவி பாங்கே, உன்னிடம் ஏதோ வித்தியாசமான ஒன்று இருக்கிறது, அதுதான் கோபம், எங்கே, அதைச் சற்று என்னிடம் காட்டு பார்க்கலாம் என்றார். அதற்கு அந்த மாணவர், இப்பொழுது என்னால் அதை உங்களுக்குக் காட்ட முடியாது என்றதும், எப்பொழுது என்னிடம் அதைக் காட்டுவாய் என்றார் துறவி. அது எதிர்பாராது மேலே கிளம்பும் என்றார் மாணவர். அப்போது துறவி, உனது கோபம் உண்மையானது என்றால், இயல்பானது என்றால், எந்தச் சமயத்திலும் அதை என்னிடம், உன்னால் காட்ட முடியும். நீ பிறந்தபோது அது உன்னிடம் இருந்தது இல்லை. அதேநேரம், அதை உன்னுடைய பெற்றோரும் உன்னிடம் கொடுத்தது இல்லை. நன்றாகச் சிந்தித்துப் பார் என்றார். கோபம் என்பது, எதிர்பார்ப்பதில் இல்லை. அது ஏமாற்றத்தில் விளைந்த ஒரு பின்செயல். எதிர்பார்ப்பு, ஏமாற்றத்தில் முடிகிறது. ஏமாற்றத்திலிருந்து கோபம் வருகிறது என்றார் துறவி பாங்கே. ஆம். எதிர்பார்ப்பும், ஏமாற்றமுமே கோபத்திற்கு மூல காரணம். இந்த உலகில் அடைய விரும்பும், பொன், பொருள், சுகம், புகழ், சமூகநிலை, பதவி போன்ற அனைத்தையும், எடுத்த இடத்திலே திருப்பி வைத்துவிடுவதே நிம்மதியான வாழ்வுக்கு நல்லது. எதிர்மறைகளை விலக்கி, நேர்மறையில் வளர அழைக்கிறது இரக்கத்தின் காலம்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.