2016-05-05 15:39:00

பாகிஸ்தானில் இறையழைத்தல் வளர்ந்துள்ளது


மே,05,2016. பாகிஸ்தானில், கிறிஸ்தவர்கள் வன்முறைகளை எதிர்கொண்டாலும், அந்நாட்டில் இறையழைத்தல் வளர்ந்துள்ளது என்று லாகூரில் அமைந்துள்ள 'சாந்தா மரியா' என்ற அருள்பணி பயிற்சி இல்லத்தின் தலைவர், அருள்பணி Inayat Bernard அவர்கள் பிதேஸ் (Fides) செய்தியிடம் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, 23 இளையோர், அருள் பணியாளர்களாக அருள்பொழிவு செய்யப்பட்டனர் என்றும், இவ்வாண்டு 15 இளையோர் அருள்பொழிவு பெற காத்திருக்கின்றனர் என்றும் அருள்பணி Bernard அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கராச்சியிலும், லாகூரிலும் உள்ள இறையியல் பயிற்சி நிலையங்களில் 170க்கும் மேற்பட்ட இளையோர் பயிற்சி பெற்று வருவதாகக் கூறிய  அருள்பணி Bernard அவர்கள், அருள் சகோதரிகளாக பணியாற்ற விழையும் இளம் பெண்களின் எண்ணிக்கையிலும் வளர்ச்சி உள்ளது என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தின் Khalsabad என்ற கிராமத்தில் வாழும் கிறிஸ்தவக் குடும்பங்கள் எழுப்ப முனைந்துள்ள ஒரு கோவிலுக்கு, அவ்வூரில் உள்ள இஸ்லாமியர் உதவிகள் செய்து வருவதாக, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.