2016-05-07 15:15:00

அணு ஆயுதங்களை உடனடியாகத் தடை செய்ய கோரிக்கை


மே,07,2016. இன்றைய உலகு எதிர்நோக்கும் அணுப் பேரிடர் அச்சுறுத்தலைக் குறைப்பதற்கு, அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்குமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு அறிவியலாளர் மற்றும் சமயத் தலைவர்கள் இணைந்த கூட்டமைப்பு, அரசுத்தலைவர் பாரக் ஒபாமா அவர்களை வலியுறுத்தியுள்ளது.

அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள், ஜி 7 உச்சி மாநாட்டுக்காக, இம்மாதத்தில் ஜப்பானுக்குச் செல்லவிருப்பதை முன்னிட்டு இவ்வாறு கேட்டுள்ள, அறிவியலாளர்களும் சமயத் தலைவர்களும், அணு ஆயுதங்கள், மனித சமுதாயத்திற்கும், நம் பூமிக் கோளுக்கும் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளன எனத் தெரிவித்தனர்.

அணு ஆயுதங்கள், ஒரு குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தப்பட்டால்கூட, அதனால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும், இப்புவியின் பெருமளவு மாசுபடுத்தப்படும் மற்றும் உலகளாவியப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் அத்தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் பன்னாட்டு நீதி மற்றும் அமைதி ஆணைக்குழுத் தலைவர் ஆயர் Oscar Cantú, அறிவியலாளர் கூட்டமைப்பின் தலைவர் Ken Kimmell, இன்னும் பிற கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் இணைந்து இந்த விண்ணப்ப அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல், வட கொரியா, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ், பிரிட்டன், இரஷ்யா ஆகிய ஒன்பது நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றன. மேலும், முப்பது நாடுகள் அவற்றைப் பெறுவதற்கான தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கின்றன என்று கூறப்படுகின்றது.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.