2016-05-12 15:28:00

இலாத்விய மொழியில், 'இறைவா உமக்கே புகழ்' திருமடல் வெளியீடு


மே,12,2016. பெந்தக்கோஸ்து நாளன்று வீசிய காற்றைப் பற்றிக் கூறும் திருத்தூதர் பணிகள் நூல், அக்காற்று, "அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் நிறைத்தது" (தி.பணிகள் 2: 1-4) என்று கூறும் பகுதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில், "நம் பொதுவான இல்லத்தைப் பேணிக் காக்க" என்று கூறியுள்ள வார்த்தைகளை நினைவுக்குக் கொணர்கிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், மே 12, இவ்வியாழனன்று இலாத்வியா நாட்டில் பயணம் மேற்கொண்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல், இலாத்விய மொழியில் வெளியிடப்பட்டது.

இந்த வெளியீட்டு விழாவில் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், இத்திருமடல் ஏற்கனவே, பிரெஞ்ச், ஆங்கிலம், அரேபியம் உட்பட 11 மொழிகளில் அதிகாரப் பூர்வமாக வெளியாகியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இத்திருமடலில் பதியப்பட்டுள்ள தேதி, 2015ம் ஆண்டு மே 24 என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், அந்தத் தேதி, தூய ஆவியார் இறங்கிவந்த பெந்தக்கோஸ்து திருநாள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு மொழி பேசும் மக்களை ஒருங்கிணைத்த பெந்தக்கோஸ்து திருநாளன்று வெளியான திருமடல், நம் பொதுவான இல்லம் குறித்து, திருத்தந்தை விடுத்துள்ள எண்ணங்களை, அவரவர் தங்கள் சொந்த மொழியில் புரிந்துகொள்ள முயல்வது சிறந்த முயற்சி என்று எடுத்துரைத்தார்.

தூக்கியெறியும் கலாச்சாரத்தை விட்டு வெளியேறி, பாதுகாக்கும் கலாச்சாரத்தை மனித சமுதாயம் பின்பற்றுவது மட்டுமே இவ்வுலகம் என்ற பொதுவான இல்லத்தைக் காக்கும் சிறந்த வழி என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

மே 7,8,9 ஆகிய மூன்று நாட்கள் லித்துவேனியா நாட்டிலும், 10,11 ஆகிய இரு நாட்கள் எஸ்டோனியா நாட்டிலும், 12,13 ஆகிய இரு நாட்கள் இலாத்வியா நாட்டிலும் பயணம் மேற்கொண்டுவரும் கர்தினால் பரோலின் அவர்கள், மே 13, இவ்வெள்ளியன்று வத்திக்கானுக்குத் திரும்புகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.