2016-05-12 16:01:00

எகிப்தில், சிறார் திருமணத்திற்கு எதிரான இணை முயற்சி


மே,12,2016. எகிப்தில் உள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையும், Al Azhar என்ற இஸ்லாமியப் பல்கலைக் கழகமும் இணைந்து, சிறார் திருமணத்திற்கு எதிராக, இணை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான, UNICEF மேற்கொண்ட முயற்சியின் பயனாக, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 2ம் Tawadros அவர்களும், Al Azhar பல்கலைக் கழகத்தின் தலைமை இமாம், Sheikh Ahmad al Tayyeb அவர்களும், இந்த அறிக்கையில் இணைந்து கையொப்பமிட்டுள்ளனர்.

கடத்தல், பாலியல் வன்கொடுமை, சிறார் திருமணம் ஆகியக் கொடுமைகளிலிருந்து குழந்தைகளை, குறிப்பாக, பெண் குழந்தைகளைக் காப்பதாக, இவ்விரு அமைப்பினரும் உறுதி செய்துள்ளனர்.

எகிப்தில் பணியாற்றும் 850க்கும் மேற்பட்ட ஆர்த்தடாக்ஸ் பணியாளர்கள், துறவியர், இமாம்கள் ஆகியோர் இந்தப் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுவர் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எகிப்தில் வாழும் குழந்தைகளில், 70 விழுக்காட்டினர், பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி, புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.