2016-05-12 15:51:00

சிரியாவிலிருந்து வெளியேறும் இளையோரைத் தடுக்கும் முயற்சி


மே,12,2016. "இயேசு ஒரு தச்சுத் தொழிலாளியாக இருந்தார் எனில், நீங்களும் ஒரு தொழிலாளியாக மாறலாம்" என்ற சொற்களுடன், சிரியா நாட்டின் ஆயர் ஒருவர், அந்நாட்டிலிருந்து வெளியேற விழையும் இளையோரைத் தடுத்துநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சிரியாவில் நிலவும் உள்நாட்டுப் போர், வறுமை, வன்முறை இவற்றால் மனம் தளர்ந்து வெளியேறும் இளையோரைத் தடுக்க, Aid to the Church in Need கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் உதவியுடன் அலெப்போவின் பேராயர் Jean-Clément Jeanbart அவர்கள், சிரியாவை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Aid to the Church in Need அமைப்பினர் அண்மையில் வழங்கிய 2,63,000 யூரோக்கள் நிதி உதவியுடன், இடிந்துபோன இல்லங்களைக் கட்டியெழுப்புதல், தொழில் கல்வியைப் பெறுதல் போன்ற செயல்பாடுகளில் இளையோரை ஈடுபடுத்தும் முயற்சியில் பேராயர் Jeanbart அவர்கள் ஈடுபட்டுள்ளார்.

ISIS இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரின் வன்முறைகளை தொடர்ந்து கண்டுவரும் இளையோர், இன்னும் தங்களிடையே சிறிது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும், இந்த நம்பிக்கையின் மீது அவர்களின் எதிர்காலத்தை எழுப்புவது, தலத்திருஅவையின் கடமை என்றும், பேராயர் Jeanbart அவர்கள் கூறினார்.

சிரியாவின் உள்நாட்டுப் போர் துவங்குவதற்கு முன், அலெப்போ நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1,50,000 என்பதும், தற்போது, அந்நகரில் இருப்பது 40,000 கிறிஸ்தவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.