2016-05-13 16:26:00

திருத்தந்தை, போலந்து பிரதமர் சந்திப்பு


மே,13,2016. வருகிற ஜூலையில், போலந்து நாட்டில் நடைபெறவிருக்கும் 31ம் உலக இளையோர் தினம் பற்றி, போலந்து குடியரசின் பிரதமர் Beata Szydło அவர்களிடம் இவ்வெள்ளியன்று பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்தில், இவ்வெள்ளி காலையில், போலந்து பிரதமர் Beata Szydło அவர்களைச் சந்தித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் அந்நாட்டில் சிறப்பிக்கப்பட்ட, அந்நாடு திருமுழுக்குப் பெற்றதன் 1050ம் ஆண்டு நிறைவு விழா குறித்தும், அவ்விழாவில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கலந்துகொண்டது பற்றியும் நினைவுகூர்ந்தார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்தார் பிரதமர் Beata Szydło.

போலந்துக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், போலந்து சமுதாயத்திற்கு, திருஅவை ஆற்றிவரும் பணிகள், சமூக-கலாச்சாரச் சூழலில் குடும்பங்களை ஊக்குவித்தல், உலக அமைதி மற்றும் பாதுகாப்பு, சிரியாவில் இடம்பெறும் சண்டை, உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மனிதாபிமானச் சூழல் போன்றவையும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்தது.

ஜூலை 27 முதல் 31 வரை, 31ம் உலக இளையோர் தினம் போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நடைபெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.