2016-05-13 16:14:00

திருத்தந்தை : ஏழ்மையை ஒழிப்பது ஒழுக்கநெறி சார்ந்த கடமை


மே,13,2016. புலம்பெயர்ந்து வாழும் நம் சகோதர, சகோதரிகளுக்கு, அத்தியாவசிய நிவாரணப் பொருள்களை உடனடியாக வழங்குவதோடு, இந்த முழு மனித சமுதாயத்தையுமே பாதித்துள்ள இவ்விவகாரத்திற்கு, நீடித்த, அரசியல், சமூக மற்றும் பொருளாதாரத் தீர்வுகளைக் காண வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக சமுதாயத்திடம் கேட்டுக்கொண்டார்.

“Centesimus Annus – Pro Pontifice (CAPP)” என்ற அறக்கட்டளை வத்திக்கானில் நடத்திவரும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் ஏறத்தாழ முன்னூறு உறுப்பினர்களை, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

உலகில் ஏழ்மையை ஒழிப்பது குறித்து, குறிப்பாக, தற்போதைய புலம்பெயர்ந்தவர் நெருக்கடியைக் களைவது குறித்து, இக்கருத்தரங்கில் பேசப்படுவது மகிழ்ச்சியளிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, ஏழ்மையை ஒழிப்பது, வெறும் பொருளாதாரப் பிரச்சனை மட்டுமல்ல, அது அறநெறியோடு தொடர்புடையது என்றும் தெரிவித்தார்.

வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது, மனித வளங்களில் முதலீடு செய்வது, உலகளாவிய பொதுநலனில் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவது ஆகியவற்றை நோக்கிய, மிகத் தெளிவான புதிய பொருளாதார வழிமுறைகள் உருவாக்கப்படுவதற்கு, இக்கருத்தரங்கு உதவும் என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை.

நற்செய்தியால் தூண்டப்பட்டு, தலத் திருஅவைகள், தலமேய்ப்பர்கள், நன்மனம் கொண்ட விசுவாசிகள் மற்றும் மக்களுடன், பலனுள்ள ஒத்துழைப்பைக் கைக்கொண்டு, நீதியிலும், அமைதியிலும், முழு மனிதக் குடும்பத்தையும் அரவணைக்கும் அன்புக் கலாச்சாரத்தில், இந்த அறக்கட்டளை உறுப்பினர்களின் பணி எப்போதும் விளங்க வேண்டும் என்ற தனது ஆவலையும் தெரியப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புதுவகை தொழிற் முயற்சிகள் வழியே வறுமையையும், புலம் பெயர்ந்தோர் பிரச்சனைகளையும் எவ்விதம் தீர்ப்பது என்ற மையக் கருத்துடன், மே 12, இவ்வியாழனன்று தொடங்கிய இக்கருத்தரங்கு, மே 14, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.  

"Centesimus Annus - Pro Pontifice" என்ற அறக்கட்டளை, 1993ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. கத்தோலிக்கத் வர்த்தகர்கள், அறிவாளிகள் மற்றும் தொழிலதிபர்களைக் கொண்டுள்ள, இந்த அறக்கட்டளை பொதுநிலையினரால் வழிநடத்தப்படுகிறது. இது, கத்தோலிக்க சமூகக் கோட்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. 1991ம் ஆண்டு மே முதல் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் வெளியிட்ட, Centesimus Annus அதாவது நூறாவது ஆண்டு என்ற திருமடலின் பெயரிலே, இந்த அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.