2016-05-17 15:41:00

La Croix ப்ரெஞ்ச் நாளிதழுக்கு திருத்தந்தை பேட்டி


மே,17,2016. திருஅவையின் மூத்த மகள் என விவரிக்கப்படும் பிரான்ஸ் நாடு, மாபெரும் புனிதர்கள், மாபெரும் சிந்தனையாளர்களின் பூமி, இப்புனிதர்களில் புனித லிசிய தெரேசா தனக்கு மிகவும் பிடித்தமானவர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

La Croix என்ற ப்ரெஞ்ச் கத்தோலிக்க நாளிதழின் Guillaume Goubert, Sébastien Maillard ஆகிய இரு பத்திரிகையாளர்க்கு, பல்வேறு தலைப்புக்களில் ஒரு மணி நேரம் பேட்டியளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்ஸ் தலத்திருஅவை தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

1950களில் பிரான்ஸ், மறைப்பணி நாடு என அழைக்கப்பட்டது என்றும், அந்நாட்டுத் தலத்திருஅவை தன்னிலே படைப்பாற்றல் திறன் கொண்டது என்றும் கூறிய திருத்தந்தை, அந்நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது குறித்த கேள்விக்கும் பதிலளித்தார்.

பிரான்ஸ் அரசுத்தலைவர் François Hollande மற்றும் ஆயர்களிடமிருந்து அழைப்புக் கடிதம் வந்துள்ளது, ஆயினும், பிரான்சில் அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெறவிருப்பதால், அத்தகைய சமயத்தில் பொதுவாக, திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்படுகின்றது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

பிரான்சில் அருள்பணியாளர்கள் பற்றாக்குறை பற்றிக் கேட்டபோது, கொரியாவை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டு, தென் கொரியாவில், இரு நூற்றாண்டுகளாக, பொதுநிலையினரால் நற்செய்தி அறிவிக்கப்பட்டது என்றும், புனிதர்களையும் மறைசாட்சிகளையும் கொண்டுள்ள வலிமையுடைய திருஅவையாக அது தற்போது விளங்குகின்றது என்றும் கூறிய திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்புக்கு, அருள்பணியாளர்கள் தேவை என்பதில்லை, நற்செய்தி அறிவிப்புக்கு, திருமுழுக்கு அருளடையாளம் சக்தி  கொடுக்கின்றது, திருமுழுக்கில் நாம் பெற்ற தூய ஆவியார் அப்பணி தொடர்ந்து வளர்வதற்கு உதவுகிறார் என்றும் தெரிவித்தார்.

அருள்பணியாளர்களின் ஆதிக்கம் திருஅவைக்கு ஆபத்தானது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடு பிரச்சனை பற்றியும் கருத்து தெரிவித்தார்.

கடவுளிடம் மக்களை இட்டுச்செல்வதற்கு அழைப்புப் பெற்றுள்ள அருள்பணியாளர், பாலியல் முறைகேட்டில் ஈடுபடும்போது, தீமையை, வெறுப்பை, வேதனையை விதைக்கிறார், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் சொல்லியிருப்பதுபோல், இந்த முறைகேட்டை, திருஅவை சகித்துக்கொள்ளாது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் உலகளாவிய மறைப்பணி கட்டளைக்கு ஒத்திணங்கும் வகையில் அதைப் புரிந்துகொண்டு வாழ்தல், நலமான சமயச்சார்பற்றதன்மை, புலம்பெயர்ந்தவர் பிரச்சனை குறித்த ஐரோப்பாவின் கருத்து, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அமைதியான நல்லிணக்க வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்பு, அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடு பிரச்சனை போன்ற பல தலைப்புக்களில் La Croix ப்ரெஞ்ச் நாளிதழுக்குப் பேட்டியளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பேட்டி இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.