2016-05-17 15:23:00

பணமும், பதவியும் திருஅவையை அழுக்கடையச் செய்கின்றன


மே,17,2016. இயேசு சுட்டிக்காட்டும் பாதை, பிறருக்குத் தொண்டுபுரியும் பாதையாக இருக்க, திருஅவை அடிக்கடி, பணம், அதிகாரம் மற்றும் பெருமையைத் தேடுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் திருப்பலியில் கூறினார்.

வத்திக்கானில், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில், திருஅவையைப் பிளவுபடுத்தும் உலகாயுதச் சோதனைகளைக் கிறிஸ்தவர்கள் வெற்றிகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இயேசுவின் சீடர்கள், தங்களில் யார் பெரியவர் என்பது பற்றி வாதாடியது குறித்துப் பேசும் இச்செவ்வாய் நற்செய்தி வாசகம்(மாற்.9,30-37) மற்றும் முதல் வாசகத்தை(யாக்.4,1-10) தனது மறையுரைக்கு கருவாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

தான் உயரே செல்ல வேண்டுமென்பதற்காக, பிறரை அழிக்கும் சோதனைக்கு நாம் உட்படுகிறோம், இந்த உலகாயுத உணர்வு, கடவுளின் எதிரி என்றும், இது இயேசுவின் உணர்வு அல்ல என்றும், இது திருஅவையைப் பிரிக்கின்றது உரைத்தார் திருத்தந்தை.

இயேசு இவ்வுலகுக்கு, பணிபுரிவதற்கேயன்றி, பணிவிடை பெறுவதற்காக வரவில்லை, ஆனால், திருஅவையின் ஒவ்வொரு நிறுவனத்திலும், உலகாயுத உணர்வுகள் தெரிகின்றன, இவையெல்லாமே, செல்வம், பெருமை, கர்வம் ஆகியவற்றைப் பற்றியதே, ஆனால், பணிவும், தாழ்மையுமே கிறிஸ்தவ வாழ்வு என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுளின் பகைவனாகிய இந்த உலகப்போக்கு உணர்வைப் புரிந்துகொள்வதற்கு ஆண்டவரிடம் வரம் வேண்டுவோம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வயான்று தன் டுவிட்டர் பக்கத்தில்  “கிறிஸ்துவைப் பின்செல்கின்றவர்களின் துணிச்சல், நம்பிக்கை, விசுவாசம் மற்றும் விடாஉறுதி, இவ்வுலகுக்குத் தேவைப்படுகின்றது” என எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.