2016-05-18 15:07:00

அமைதி ஆர்வலர்கள் : 2015ல் நொபெல் அமைதி விருது (Quartet)


மே,18,2016. அரபு உலகத்தில் ஒரே சனநாயக நாடாக விளங்குவது டுனிசியா. வட ஆப்ரிக்காவில் அமைந்துள்ள இந்நாட்டில், இஸ்லாம், அரசு மதமாகவும், அரபு மொழி, நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளன. மேலும், மக்கள் டுனிசிய அரபு, ப்ரெஞ்ச் மொழியையும் பேசுகின்றனர். அந்நாட்டில், வேலைவாய்ப்பின்மை, உணவுப் பற்றாக்குறை, ஊழல், பேச்சு சுதந்திரமின்மை, மோசமான வாழ்க்கைத்தரம் மற்றும் அரசியல் சுதந்திரமின்மை ஆகியவை அதிகமாக நிலவியதால், குடிமக்கள் புரட்சி ஆரம்பித்தது. இப்புரட்சிகளை, தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைத்து நடத்தின. மேலும், தெருவில் விற்பனை செய்துவந்த Mohamed Bouazizi என்ற 26 வயதான இளையவரின் கடைப்பொருள்கள், நகராட்சி அலுவலகர் ஒருவரால் பறிமுதல் செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதால், அந்த இளைஞர், 2010ம் ஆண்டு சனவரி 17ம் தேதி, தீக்குளித்து, இறந்தார். இளைஞர் Bouaziziயின் மரணத்தைத் தொடர்ந்து வெகுண்டெழுந்த மக்கள், 2011ம் ஆண்டு, சனவரி 4ம் தேதி, தங்களின் வன்முறைப் புரட்சியைத் தீவிரப்படுத்தினர். சனநாயகத்தை வலியுறுத்தி டுனிசியா நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. ஜாஸ்மின் புரட்சி எனப்படும் இந்த அரபு புரட்சியே, அரபு உலகெங்கும் அரபு வசந்தம் என்ற புரட்சி வெடிக்கக் காரணமானது. டுனிசியாவில் இடம்பெற்ற மக்கள் கொந்தளிப்பால் அந்நாட்டின் நீண்டகால அரசுத்தலைவர் Zine El Abidine Ben Ali, 23 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சிக்குப் பின்னர் கட்டாயமாகப் பதவி விலகினார்.

டுனிசிய அரசுத்தலைவர் Ben Ali அவர்கள் பதவி விலகிய பின்னர், டுனிசியாவில் சனநாயக அரசை அமைக்கும் நடவடிக்கைகள் ஆபத்தை எதிர்கொண்டன. எகிப்தில் இடம்பெற்றதுபோன்று, டுனிசியாவிலும், இஸ்லாமியரால் வழிநடத்தப்பட்ட அரசு, புதிய அரசமைப்பை எழுதியபோது, சமயச்சார்பற்ற கண்ணோட்டதைப் புறக்கணித்தது. இதனால், தெருக்களில் மோதல்கள் மற்றும் உயர்மட்ட அரசியல் கொலைகள் இடம்பெற்றன. சலாஃபி இஸ்லாம் பிரிவின் தீவிரவாதிகள் உருவாகும் நிலையும் காணப்பட்டது. பொதுவாக, அந்நாட்டில் பரவலான சமூகப் பதட்டநிலை உருவாகி, அந்நாட்டை ஓர் உள்நாட்டுச் சண்டைக்கு இட்டுச்செல்லும் நிலைக்கு உட்படுத்தின. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு உட்படுமோ என்ற அச்சம் நிலவியது. இச்சூழலில், 2013ம் ஆண்டு கோடை காலத்தில்,  Tunisian National Dialogue Quartet என்ற, நான்கு நிறுவனங்களைக்கொண்ட டுனிசிய தேசிய உரையாடல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. டுனிசிய பொது தொழில் கழகம் (UGTT), தொழிற்சாலை, வர்த்தகம் மற்றும் கைவினைப்பொருள்களின் டுனிசிய கூட்டமைப்பு(UTICA), டுனிசிய மனித உரிமைகள் அமைப்பு (LTDH), டுனிசிய வழக்கறிஞர்கள் கழகம்(Ordre National des Avocats de Tunisie) ஆகிய நான்கு அமைப்புகளும் இணைந்து, Tunisian National Dialogue Quartet என்ற பெயரில், நாட்டின் அமைதியான அரசியல் நடவடிக்கைக்கு முயற்சிகளை மேற்கொண்டன. Quartet என்ற இக்கூட்டமைப்பே, பாலினம், அரசியல் அல்லது சமய நம்பிக்கை வேறுபாடின்றி, அந்நாட்டின் மக்கள் எல்லாருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு உறுதியளிக்கும் அரசமைப்பு உருவாகக் காரணமானது. இக்கூட்டமைப்புக்கே, 2015ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது.

டுனிசிய சமுதாயத்தில், பல்வேறு துறைகள் மற்றும், விழுமியங்களின் பிரதிநிதிகளாக, குடிமக்களின் வாழ்வு, நல்வாழ்வு, சட்டம் மற்றும் மனித உரிமை கோட்பாடுகள் ஆகியவற்றுக்காக, இந்த நான்கு அமைப்புகளும் உழைத்து வருகின்றன. இவற்றின் அடிப்படையில், Quartet கூட்டமைப்பு, தனக்குரிய மாபெரும் அறநெறி அதிகாரத்தை வைத்து, டுனிசியாவில் சனநாயக முன்னேற்றம் அமைதியாக இடம்பெறுவதற்கு, இடைநிலை வகித்தது. இந்த Quartet கூட்டமைப்புக்கு 2015ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை வழங்கிய நார்வே குழு இப்படிக் கூறியது. இவ்வாண்டின் இவ்விருது, டுனிசியாவில் பாதுகாப்பான சனநாயகத்திற்கு உதவும். மேலும், மத்திய கிழக்குப் பகுதியிலும், வட ஆப்ரிக்காவிலும், உலகின் பிற பகுதிகளிலும் அமைதி மற்றும்  சனநாயகத்தை ஊக்குவிக்க முயற்சிப்பவர்களுக்கு, இவ்விருது ஒரு தூண்டுகோலாக அமையும்.

2015ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதுக்கென. 68 நிறுவனங்கள் மற்றும் 205 ஆர்வலர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. 2014ம் ஆண்டில் இவ்விருதுக்கென 278 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. 2016ம் ஆண்டுக்கான நொபெல் அமைதி விருது, வருகிற அக்டோபர் 7ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும். அன்பர்களே, இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படத் தொடங்கிய 1901க்கும், 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 96 முறைகள், 129 ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 103 தனி நபர்கள் மற்றும் 26 நிறுவனங்கள் ஆகும். 1917, 1944, 1963 ஆகிய ஆண்டுகளில், மூன்று முறைகள், அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் இதனைப் பெற்றுள்ளது. UNHCR என்ற ஐ.நா. புலம்பெயர்ந்தவர் நிறுவனம், 1954 மற்றும் 1981ம் ஆண்டுகளில் இருமுறை பெற்றுள்ளது. 23 தனிப்பட்ட நிறுவனங்களும் இவ்விருதைப் பெற்றுள்ளன. 1979ல் அருளாளர் அன்னை தெரெசா, 2014ல் கைலாஷ் சத்யார்த்தி ஆகிய இரு இந்தியர்கள் இந்த நொபெல் அமைதி விருதைப் பெற்றுள்ளனர். மேலும், 2007ல் இவ்விருதைப் பகிர்ந்துகொண்ட, காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான IPCC அமைப்பின் உதவித் தலைவர் இலங்கையின் Mohan Munasinghe அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயற்பியலாளர் மற்றும், பொருளாதார நிபுணர் ஆவார்.

அன்பு இதயங்களே, 2014ம் ஆண்டில் தொடங்கிய அமைதி ஆர்வலர்கள் தொடர் நிகழ்ச்சியை இத்துடன் நிறைவு செய்கின்றோம். அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் வாழ்க்கை வரலாறுடன் தொடங்கும் இரக்கத்தின் தூதர்கள் என்ற புதிய தொடரில் அடுத்தவாரம் சந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.