2016-05-18 15:37:00

கிறிஸ்தவ, இஸ்லாமிய மறைகளில் இரக்கம் – இலாகூர் கருத்தரங்கு


மே,18,2016. "கிறிஸ்தவ மறையிலும், இஸ்லாமிய மறையிலும் இரக்கம்" என்ற தலைப்பில், பாகிஸ்தான் இலாகூர் நகரில், ஒரு கருத்தரங்கு நடைபெற்றதென, பிதேஸ் (Fides) செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

நடைபெற்றுவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, பாகிஸ்தான் பல்சமய உரையாடல் பணிக்குழு ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில், கிறிஸ்தவ, இஸ்லாமிய அறிஞர்களும், தலைவர்களும் பங்கேற்றனர்.

'இறைவன் இரக்கமுள்ளவர்' என்ற கருத்து, கிறிஸ்தவ விவிலியத்திலும், இஸ்லாமியரின் குர்ஆனிலும் அடிக்கடி இடம்பெற்றுள்ள ஒரு கருத்து என்பது, இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

ஒருவர் தன் சமயத்திலிருந்து மற்றொரு சமயத்திற்கு மாற, இரக்கம் என்பது, அவரைக் கவர்ந்திழுக்கும் அம்சமாக இருக்கவேண்டும்; மற்றவர்களை எக்காரணம் கொண்டும் வற்புறுத்தி மத மாற்றம் செய்யக்கூடாது என்ற கருத்துக்கள் குர்ஆனில் இடம்பெற்றுள்ளன என்று, Shafaat Rasool என்ற இஸ்லாமியத் தலைவர் கூறினார்.

மதத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், ஒற்றுமை, அமைதி, மன்னிப்பு, சகிப்புத் தன்மை ஆகிய நற்பண்புகளை பாகிஸ்தான் நாட்டில் வளர்க்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தில், கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்டனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.