2016-05-19 15:29:00

இஸ்ரேல் அரசின் அடக்குமுறைக்கு ஐ.நா. உயர் அதிகாரி கண்டனம்


மே,19,2016. இஸ்ரேல் அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதியில், பன்னாட்டு உதவிகள், தேவைப்பட்டவர்களுக்குச் சென்று சேர்வதை, இஸ்ரேல் அரசு தடை செய்துவருவதாக, ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் வன்மையானக் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் அகதிகள் போல வாழும் 9 பாலஸ்தீனிய குடும்பங்களின் இல்லங்களை இஸ்ரேல் அரசு இடித்து, அவர்களிடம் இருந்த பொருள்களை அபகரித்துள்ளதால், 22 குழந்தைகள் உட்பட, 49 பேர் தங்க இடமின்றி வாழ்கின்றனர் என்று ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதியில் பணியாற்றும் ஐ.நா. உயர் அதிகாரி, இராபர்ட் பைப்பர் அவர்கள் கூறினார்.

ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைக்கும் பைப்பர் அவர்கள், இஸ்ரேல் அரசு செய்து வரும் கொடுமைகள், 4வது ஜெனீவா ஒப்பந்தத்திற்கு நேர் மாறானவை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் அரசின் அடக்கு முறைகளால், வடகரையில் வாழும் மக்களில் 3000த்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தங்கள் வாழ்வு ஆதாரங்களை இழந்துள்ளனர் என்று ஐ.நா. விடுத்துள்ள ஓர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.