2016-05-23 11:41:00

இது இரக்கத்தின் காலம்:பேரின்பத்தைச் சுவைக்க சிறு பற்றும் தடை


ஜப்பானில், ஏஹி(Eihei-ji) என்ற புத்தமதக் கோவில் தலைவராக இருந்தவர் ஜென் குரு கிட்டானோ ஜெம்போ(Kitano Gempo). இவர் தனது இருபதாவது வயதில் ஊர் ஊராகச் சென்று போதித்து வந்தார். அச்சமயத்தில் ஒருநாள், புகைப்பிடிக்கும் வழிப்போக்கர் ஒருவரைச் சந்தித்தார். இருவரும் நடந்துசென்று ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்தார்கள். அந்த வழிபோக்கர், ஜெம்போவுக்கு ஒரு சுருட்டைக் கொடுத்தார். பசியாக இருந்த ஜென் குருவும் அதைப் புகைத்தார். இந்தப் புகைப்பிடித்தல் எவ்வளவு அற்புதமாக இருக்கின்றது என்று சொல்லி மகிழ்ந்தார். உடனே வழிபோக்கர், இன்னொரு சுருட்டையும் கொடுத்துவிட்டு போய்விட்டார். அதை வாங்கிய ஜெம்போ அவர்கள், இதைப் போன்ற உடல்ரீதியாக மகிழ்ச்சி கொடுக்கும் பொருள் தியானத்திற்கு இடையூறாக இருக்கும். அதனால் இந்தப் பழக்கம் ஏற்படுவதற்கு முன்னரே இதை விட்டுவிட வேண்டும். எனவே இதை இத்துடன் விட்டுவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, அந்தச் சுருட்டைத் தூக்கி எறிந்தார். ஜெம்போ அவர்களுக்கு 23 வயது நடந்தபோது, ஐகிங் (I-King) எழுதிய இப்பிரபஞ்சம் பற்றிய தத்துவத்தை வாசித்தார். அது குளிர்காலம். தனக்கு ஒரு கனமான கம்பளி தேவை என்று, நூறு மைல் தூரத்திலிருந்த தன்னுடைய ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதி, ஒருவர் வழியாகக் கொடுத்தனுப்பினார். ஆனால் குளிர்காலம் முடிந்தும் ஆசிரியரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. பல மாதங்கள் சென்று ஆசிரியரிடமிருந்து வந்த கடிதத்திலும் கம்பளி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அந்தக் கம்பளிப் பற்றையும் விட்டுவிட்டார் ஜெம்போ. பிறகு ஒருநாள், ஐகிங் தத்துவத்தில் ஆழமாகச் செல்ல முயன்றால், தியானத்தைக் கைவிட நேரிடும் என்று நினைத்து, அதை வாசிப்பதையும் கைவிட்டார். இப்படி, தனது 92வது வயதில், 1933ம் ஆண்டில் இறந்த ஜென் குரு ஜெம்போ அவர்கள், எதிலும் ஒரு பற்றற்ற தன்மையைக் கடைப்பிடித்து வந்தார் என்று சொல்லப்படுகின்றது.  ஆம். இவ்வுலகில் எந்த ஒரு சிறு பற்றும் விண்ணுலகை அடையத் தடையாக உள்ளது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.