2016-05-24 16:06:00

ஹிரோஷிமா மக்களின் கண்ணீர்க் கதைகளை ஒபாமா கேட்க வேண்டும்


மே,24,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பாரக் ஒபாமா அவர்களின் ஜப்பான் சுற்றுப்பயணம், உலகில் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்ற விழிப்புணர்வை, ஜப்பானில் பலரில் ஏற்படுத்தும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டார் ஜப்பான் ஆயர் ஒருவர்.

ஜப்பானின் Kashikojimaவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர், ஹிரோஷிமா நகரைப் பார்வையிடச் செல்லும் அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள், ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் உயிர்தப்பி வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் குரல்களைக் கேட்க வேண்டும், ஏனென்றால், இம்மக்கள், பலியானவர்களின் குரல்களின் பிரதிநிதிகள் என்று கூறினார் ஜப்பானின் Niigata ஆயர் Tarcisio Isao Kikuchi.

அணுசக்தி படுகொலைகள் பற்றி ஜப்பானியர் பேசும்போது, எண்கள் பற்றிப் பேசவில்லை, ஆனால், மனித வாழ்வு மற்றும், அதன் கண்ணீர்க் கதைகள் பற்றிப் பேசுகிறோம் என்பதை, அமெரிக்க அரசுத்தலைவரும், உலகமும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், ஆயர் Isao அவர்கள் கூறினார்.

ஆயுதக்களைவுக்குத் தன்னை அர்ப்பணித்துள்ள அரசுத்தலைவர் ஒபாமா அவர்களைப் பாராட்ட வேண்டும், ஆயினும், இறைவனால் நமக்கு வழங்கப்பட்டுள்ள மனித வாழ்வு மற்றும் மனித மாண்பை மதிக்கும் நோக்கத்தில், உலகை அணு ஆயுதமற்ற இடமாக அமைக்கும் நோக்கத்தை அவர் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார் ஆயர் Isao.

மே 26,27 அதாவது வருகிற வியாழன், வெள்ளி தினங்களில், ஜப்பானின் Kashiko தீவில், Shima Kanko பயணியர் விடுதியில், 42வது G7 உச்சி மாநாடு நடைபெறும்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.