2016-05-27 15:54:00

கர்தினால் காப்போவில்லா இறப்புக்கு திருத்தந்தை இரங்கல்


மே,27,2016. புனித திருத்தந்தை 23ம் அருளப்பர் அவர்களின் செயலரும், கர்தினால்கள் அவையில் வயதான உறுப்பினருமாக இருந்த, நூறு வயது நிரம்பிய கர்தினால் லோரிஸ் பிரான்செஸ்கோ காப்போவில்லா அவர்கள் உயிரிழந்ததை முன்னிட்டு, தனது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் பெர்கமோ ஆயர் பிரான்செஸ்கோ பெஸ்கி அவர்களுக்கு, இவ்வெள்ளியன்று இரங்கல் தந்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, புனித திருத்தந்தை 23ம் அருளப்பர் மீது காட்டிய விசுவாசம், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் அவர் திறம்பட ஆற்றிய பணிகள், இன்னும், பிரமாணிக்கமுள்ள மேய்ப்பராக, விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தது என, மறைந்த கர்தினால் காப்போவில்லா அவர்களின் நல்வாழ்வைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

கர்தினால் காப்போவில்லா அவர்கள், இறுதிக் காலத்தில் வாழ்ந்த பெர்கமோ மறைமாவட்ட மக்களுக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளதோடு, கர்தினால் அவர்களின் ஆன்மா நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்    திருத்தந்தை பிரான்சிஸ்

இத்தாலியின் போந்தேலொங்கோவில் 1915ம் ஆண்டு பிறந்த கர்தினால் காப்போவில்லா அவர்கள், பிற்காலத்தில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் ரொன்காலி அவர்களுக்கு, 1953ம் ஆண்டில், தனது 37 வது வயதில் செயலராகப் பணியைத் தொடங்கினார். கர்தினால் ரொன்காலி அவர்கள், திருத்தந்தை 23ம் அருளப்பராகத் தலைமைப் பணியேற்றது முதல் அவரின் நண்பராகவும், பிரமாணிக்கமுள்ள செயலராகவும் பணியாற்றினார் கர்தினால் காப்போவில்லா.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தொடங்கிய போதும், உலகில் பனிப்போரின் அரசியல்-இராணுவப் பதட்டநிலைகளின்போதும், திருத்தந்தை 23ம் அருளப்பர் அவர்களுக்கு உதவிக்கரமாகச் செயல்பட்டவர் கர்தினால் காப்போவில்லா.

கர்தினால் காப்போவில்லா அவர்கள், தனது நூறாவது வயதில் இவ்வியாழனன்று இறைபதம் அடைந்தார். இவரின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 213. இவர்களில் 80 வயதுக்குட்பட்டவர்கள் 114 பேர் ஆவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.