2016-05-28 12:07:00

இது இரக்கத்தின் காலம் – மனதால் உணரும் மறையுண்மை


இயேசுவின் திருஉடல் திருஇரத்தம் பற்றிய மறையுண்மையை நம்ப மறுத்த ஒருவர், எளிய மனம் கொண்ட பங்குத்தந்தை ஒருவரை, தன் அறிவுத்திறனால் வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

"அப்பமும், இரசமும் எப்படி இயேசுவின் உடலாக, இரத்தமாக மாற முடியும்?" இது அவரது முதல் கேள்வி. "நீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலாக நீங்கள் மாற்ற முடியும்போது, இயேசுவால் இந்த அப்பத்தையும் இரசத்தையும் தன் உடலாக, இரத்தமாக மாற்ற முடியாதா?" என்று மறு கேள்வி கேட்டார் பங்குத்தந்தை.

"எப்படி இயேசுவின் முழு உடலும் இந்த சிறு அப்பத்திற்குள் இருக்க முடியும்?" என்று தன் அடுத்தக் கேள்வியைத் தொடர்ந்தார். "உங்களுக்கு முன் விரிந்திருக்கும் இந்த உலகை எப்படி உங்கள் கண்களுக்குள் அடக்கி விடுகிறீர்களோ, அப்படித்தான்." என்று பொறுமையாகப் பதில் தந்தார் பங்குத்தந்தை.

கேள்வி கேட்டவர், விடுவதாக இல்லை. "எப்படி ஒரே நேரத்தில் இயேசு எல்லாக் கோவில்களிலும் பிரசன்னமாகி இருக்க முடியும்?" என்று தன் அடுத்தக் கேள்வியைக் கேட்டார்.

பங்குத்தந்தை முகம் பார்க்கும் ஒரு கண்ணாடியை அவரிடம் கொடுத்தார். "இதில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார். "என் முகம் தெரிகிறது" என்றார் வந்தவர். பங்குத்தந்தை அந்தக் கண்ணாடியைத் தரையில் போட்டார். கண்ணாடி உடைந்து பல துண்டுகளானது. “இந்தத் துண்டுகளில் எல்லாம் என்ன தெரிகிறது?” என்று பங்குத்தந்தை கேட்டபோது, அறிவாளி, "இவை ஒவ்வொன்றிலும் என் முகம் தெரிகிறது" என்றார். “உங்கள் ஒரே முகம் பல துண்டுகளில் இருக்கிறதே, அதேபோல் இயேசுவின் பிரசன்னமும் எல்லாக் கோவில்களிலும் ஒரே நேரத்தில் உள்ளது.” என்று பங்குத்தந்தை கூறினார்.

இயேசுவின் அன்பையும், இரக்கத்தையும் முழுமையாய் வெளிப்படுத்தும் அவரது திருஉடல், திருஇரத்தம் என்ற மறையுண்மையை, மனதின் ஆழத்தில் உணரவேண்டும், அறிவால் ஆழம் பார்க்கக்கூடாது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.