2016-05-28 15:23:00

கலவரங்களில் எந்த ஓர் அரசியல் கட்சியுமே முழு நிரபராதியல்ல


மே,28,2016. நாட்டில் நடக்கும் கலவரங்களின்போது, எந்த ஓர் அரசியல் கட்சியுமே முழுவதும் குற்றமற்றது என்று சொல்லமுடியாத நிலை இருக்கின்றபோது, அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று, ஐவரி கோஸ்ட் நாட்டு ஆயர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டை முன்னிட்டு நடந்த தேசியத் திருப்பயணத்தில், Yamoussoukro நகர் அமைதியின் அன்னை மரியா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய Katiola ஆயர் Ignace Bessi Dogbo அவர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு, ஒப்புரவு இயல்பாகவே தேவைப்படுகின்றது என்று கூறினார். ஐவரி கோஸ்ட் நாட்டினர் எல்லாரும் ஒப்புரவுடன் வாழ்வதற்கு, குடிமக்கள் ஒவ்வொருவரும் சுதந்திர உணர்வோடும், தாங்கள் பயன்படுத்தப்படுவோம் என்ற அச்சமின்றியும் வாழ்வது இன்றியமையாதது என்றும் கூறினார் ஆயர் Dogbo.

ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட், 2002க்கும், 2011ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டு இராணுவ அரசியல் நெருக்கடியில் கடுமையாய்த் துன்புற்றது. 2010ம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில், தற்போதைய அரசுத்தலைவர் Alassane Ouattara அவர்கள் அடைந்த வெற்றியை, முன்னாள் அரசுத்தலைவர் Laurent Gbagbo அவர்கள் ஏற்காததால், தேர்தலுக்குப் பின் நடந்த சண்டையில், 5 மாதங்களில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்தனர்.   

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.