2016-05-28 12:21:00

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா : ஞாயிறு சிந்தனை


இயேசு சபையின் முன்னாள் தலைவர் பேத்ரோ அருப்பே அவர்கள், சபையின் தலைவராவதற்கு முன், ஜப்பானில் பணி புரிந்தவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த நேரத்தில் அங்கு அவர் நவதுறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு ஹிரோஷிமாவை அழித்தது. 80,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்த கொடுமையின்போது, அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை நவதுறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது. அந்த இல்லம் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும் காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள் அந்தக் கோவிலில் பேத்ரோ அருப்பே அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார். அந்தத் திருப்பலி நேரத்தில் அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்:

"நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக் குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்த பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்கமுடியாத திருப்பலி அது" என்று அருள்தந்தை பேத்ரோ அருப்பே அவர்கள் தன் நினைவுகளை எழுதியுள்ளார்.

அருள்தந்தை பேத்ரோ அருப்பே மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்ல, வெளியிலும் சென்று தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார். ஒரு நாள் மாலை அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்தபோது, Nakamura San என்ற இளம் பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர் வீச்சால் அந்த இளம் பெண்ணின் உடல் பெருமளவு எரிந்துபோய், கொடூரமான வேதனையில் அந்தப் பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் இருந்த நிலையைக் கண்ட தந்தை அருப்பே அவர்கள், கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக் கொண்டு, அவர் அருகில் முழந்தாள் படியிட்டு, அவரது காயங்களுக்கு மருந்துகள் இட்டபோது, அந்தப் பெண் தந்தை அருப்பேயிடம், "பாதர், எனக்கு திருநற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். தந்தை தலையை அசைத்தபடி, தான் கொண்டு வந்திருந்த திருநற்கருணையை அந்தப் பெண்ணுக்குத் தந்தார். மிகுந்த பக்தியுடன் நற்கருணையை உட்கொண்ட Nakamura San சில நிமிடங்களில் இறையடி சேர்ந்தார்.

ஒரு மறக்கமுடியாத திருப்பலி, மறக்க முடியாத நற்கருணைப் பகிர்வு இரண்டையும் அருள்தந்தை அருப்பே அவர்கள் தன் வாழ்வைப் பாதித்த ஆழமான நினைவுகளாக எழுதிச் சென்றுள்ளார். காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் திரு உடல் திரு இரத்தத் திருவிழா.

நம்மில் பலர் சிறுவயதில் புது நன்மை வாங்கியிருப்போம். அந்த நாளுக்கென நம்மைத் தயாரிக்க, பங்குதந்தையர் அல்லது அருள்சகோதரிகள் நமக்கு மறைகல்விப் பாடங்கள் சொல்லித் தந்திருப்பர். அப்ப இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி இருக்கும் இந்தப் பெரும் மறையுண்மையைப் பற்றி கதைகள் பல சொல்லியிருப்பர். இந்தக் கதைகள் இன்னும் நம் நினைவுகளில் தங்கியிருந்தால், இன்னும் நம் வாழ்வில் தாக்கங்களை உருவாக்கி வந்தால், நாம் பேறு பெற்றவர்கள்.

குழந்தைகளாய் நாம் இருந்தபோது கற்றுக்கொண்ட பாடங்கள் பல இன்னும் நம் வாழ்வில் பாதிப்புக்களை உருவாக்கி வருகின்றன. வயதில் நாம் வளர்ந்த பின், சிந்திப்பதிலும் பல மாற்றங்களை உணர்ந்திருக்கிறோம். இந்த மாற்றங்கள் நமது குழந்தைப் பருவச் சிந்தனைகளைவிட சிறந்தவை என்று எப்போதும் சொல்லிவிட முடியாது. பல நேரங்களில் நாம் சிந்திப்பதில் குழம்பிப்போயிருக்கும்போது, குழந்தைகளைப் போல் எளிதாக, தெளிவாக சிந்திக்க முடியவில்லையே என்று ஏங்கியிருக்கிறோம். பல நேரங்களில் வயதில் வளர்ந்தவர்களுக்கு, குழந்தைகள் பாடங்கள் சொல்லித் தருகின்றனர். சென்ற வாரம் மூவொரு இறைவனைப் பற்றி புனித அகஸ்தினுக்கு கடற்கரையில் ஒரு சிறுவன் சொல்லித்தந்த பாடத்தைப்பற்றி சிந்தித்தோம். இன்று நாம் கொண்டாடும் ஆண்டவரின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவுக்குத் தேவையான பாடத்தை மற்றொரு குழந்தையின் மூலம் பயில முயல்வோம். நாம் சந்திக்கப் போகும் குழந்தை, அன்பு மருத்துவர் (Doctor Love) என்று புகழ்பெற்ற Leo Buscaglia என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு பெற்ற ஒரு குழந்தை.

அதிக அன்பு காட்டிய குழந்தை யார் என்று தீர்மானிக்க, ஒருமுறை Leo Buscagliaவை நடுவராக நியமித்தனர். பல குழந்தைகள் இந்தப் போட்டிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அண்மையில் செய்த மிக அன்பு நிறைந்த செயல்கள் Leoவிடம் விவரிக்கப் பட்டன. அக்குழந்தைகளிலிருந்து ஒரு 4 வயது சிறுவன் மிக அன்பு காட்டிய சிறுவன் என்று Leo தேர்ந்தெடுத்தார். அந்தச் சிறுவன் என்ன செய்தான்?

அச்சிறுவனின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் மனைவியை அண்மையில் இழந்தவர். ஒரு நாள் மாலை அவர் தன் வீட்டுக்கு முன்புறத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்த அச்சிறுவன் அந்த முதியவர் அருகே சென்று, அவர் மடியில் ஏறி அமர்ந்தான். இருவரும் ஒன்றும் பேசவில்லை. நீண்டநேரம் சென்று சிறுவன் மீண்டும் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவன் செய்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா அவனிடம், "நீ தாத்தா மடியில உக்காந்திருந்தியே, அவர்கிட்ட என்ன சொன்ன?" என்று கேட்டார். சிறுவன் அம்மாவிடம், "ஒன்னும் சொல்லல. அவர் நல்லா அழட்டும்னு அவர் மடியில உக்கார்ந்திருந்தேன்." என்று சொன்னான்.

அச்சிறுவனின் இந்தச் செயலுக்காக அதிகக் கனிவுடையக் குழந்தை என்ற பரிசை அந்தச் சிறுவனுக்கு Leo வழங்கினார். அந்த முதியவரின் மடியில் எவ்விதத் தயக்கமும் இல்லாமல், உரிமையோடு ஏறி அமர்ந்திருந்த நான்கு வயது சிறுவன், இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவின் உட்பொருளை நமக்கு சொல்லித் தருகிறான்.

அன்பை பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்பு கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம். அந்த அன்பின் சிகரத்தை நமக்குக் காட்டுவது, இயேசுவின் திருஉடல், திருஇரத்தத் திருவிழா.

எப்படி நம் இறைவன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்வியை விட, அவர் ஏன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்விக்கு விடை தேடுவது நமக்கு நல்லது என்று சென்ற வாரம் சிந்தித்தோம். அதேபோல், இயேசு எப்படி அந்த அப்ப இரச வடிவில் பிரசன்னமாகி இருக்கிறார் என்ற கேள்விக்கு இறையியல் விளக்கங்கள் தேடுவதற்குப் பதில், இயேசு ஏன் அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கவிழைந்தார் என்பதை உணர்ந்துகொள்வது நமக்குப் பயனளிக்கும்.

ஏன் இறைமகன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும் இஸ்ரயேல் மக்களிடம் இருந்த எளிய உணவுப் பொருட்கள். இந்த உணவு இவர்கள் தினமும் உண்ட உணவு. எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படை குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன். எளிய வடிவங்கள் அவருக்குப் பிடித்த வடிவங்கள். எளிய உணவில், நாம் தினமும் உண்ணும் உணவில், நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவில் இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இணைபிரியாமல், எப்போதும் மனித குலத்துடன் தங்கியிருப்பதற்கு இயேசு இந்த வழியை நிறுவிச் சென்றார்.

இயேசுவின் இந்த பிரசன்னத்தைப் பற்றிய பல புதுமைகள் மனித வரலாற்றில் நடந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன. தங்களுடன் இறைமகன் இயேசு இருக்கிறார் என்ற அந்த ஓர் உணர்வால் எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்கள் வாழ்வை அவருக்காக அர்ப்பணித்தனர்.

அத்தகைய ஓர் உன்னத உள்ளத்தின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வு இதோ:

17ம் நூற்றாண்டில் கனடாவில் பழங்குடியினரிடையே பணி புரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித Isaac Jogues அவர்களும் ஒருவர். அந்த மக்களால் சித்ரவதைகள் செய்யப்பட்டு, அவர் தன் கை விரல்களையெல்லாம் இழந்திருந்தார். இந்நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். கைவிரல்கள் இல்லாததால், அவர் திருப்பலி செய்வதற்கு திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் Urban அவர்களிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இந்த அருள்பணியாளர் திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் தன் விரல்களற்ற கரங்களில் அவர் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.

தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருநாளன்று, நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு ஏதோ ஒரு வகையில் நம்மையே வழங்கும் வழிகளை இறைமகன் நமக்குச் சொல்லித்தர வேண்டுமென்று மன்றாடுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.