2016-05-30 16:21:00

சிரியாச் சிறார்க்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு


மே,30,2016. ஜூன் முதல் தேதியன்று சிரியாவில் சிறார்க்காகச் சிறப்பு செப நாள் மற்றும் பல நாடுகளில் சிறாரைப் பாதுகாக்கும் உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, சிரியா நாட்டுச் சிறார்க்காகச் செபிக்குமாறு இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

தியாக்கோன்கள் யூபிலி விழாத் திருப்பலிக்குப் பின்னர், நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்கான தங்களின் செபத்தில், உலகிலுள்ள சிறார் அனைவரும் இணையுமாறு, சிரியா சிறார் கேட்கின்றனர் என்றுரைத்தார்.

சிரியாவிலுள்ள கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், அந்நாட்டில் அமைதிக்காகச் சிறப்புச் செப நிகழ்வை ஒன்றை நடத்தவுள்ளனர், இதில் சிறார்க்காகச் சிறப்பாகச் செபிக்கப்படும் என்றும் கூறிய திருத்தந்தை, கிராக்கோவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்தை அன்னை மரியாவின் பாதுகாவலில் அர்ப்பணித்தார்.

சிறாரைப் பாதுகாக்கும் உலக தினம், உலகின் பல நாடுகளில், 1950ம் ஆண்டிலிருந்து ஜூன் முதல் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 1949ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி, மாஸ்கோவில் நடைபெற்ற, பெண்களின் உலக சனநாயகக் கூட்டமைப்பு மாநாட்டில், இந்த உலக நாள் உருவாக்கப்பட்டது. ஐ.நா. உலகளாவிய சிறார் தினம் நவம்பர் 20ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இதற்கிடையே, சிரியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நடத்தப்பட்ட ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து, முக்கிய எதிர்க்கட்சிக் குழுக்களின் தலைமைப் பிரதிநிதி முகமது அலூஷ் அவர்கள் விலகியிருப்பது, சிரியாவின் அமைதி முயற்சிகளுக்கு பின்னடைவாக நோக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.