2016-05-30 15:53:00

திருத்தந்தை : திருஅவை இறைவாக்குக்குத் திறந்தமனம் கொண்டது


மே,30,2016. கடவுளிடமிருந்து பெற்ற கொடைகளை நினைவில் வைத்திருப்பவர்களாய், இறைவாக்கு மற்றும் நம்பிக்கையின் எல்லைக்குத் திறந்த மனம் கொண்டவர்களாய் வாழ்வதில், திருஅவையும், கிறிஸ்தவர்களும் கவனம் செலுத்துமாறு, இத்திங்கள் காலை திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை நிறைவேற்றிய திருப்பலியில், கொடிய குத்தகைக்காரர் உவமை பற்றிய நற்செய்தி வாசகத்தை(மாற்.12:1-12) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, நினைவுகளில் வாழ்தல், இறைவாக்கு உணர்வு, நம்பிக்கை பற்றிய உறுதி ஆகியவை, கிறிஸ்தவ வாழ்வில் உயிர்த்துடிப்புள்ள ஒன்றிப்பின் அடையாளங்கள் என்றும் கூறினார்.

இவ்வுவமையில், குத்தகைக்காரர் கொலை செய்த திராட்சைத் தோட்ட முதலாளியின் பணியாளர்களும், அவரின் சொந்த மகனும், இறைவாக்கினர்களையும், கிறிஸ்துவையுமே சுட்டிக் காட்டுகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, இச்செயல், மக்கள் கடவுளின் வாக்குறுதிகளுக்குத் திறந்த மனம் கொண்டிருக்கவில்லை, அவரின் வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது என்று கூறினார்.

கோட்பாடுகள் குறித்த நுணுக்க வாதங்களில் ஈடுபடுபவர்கள், தூய ஆவியார் வழங்கும் சுதந்திரத்தை அனுமதிக்கவில்லை, இவர்கள் கடவுளின் கொடையை அங்கீகரிக்கவில்லை, ஆவியாரைக் கூண்டுக்குள் வைக்கின்றனர் என்றும் உரைத்தார் திருத்தந்தை. என் வாழ்வில், ஆண்டவர் கொணர்ந்த வியப்புக்களின் நினைவைக் கொண்டிருக்கிறேனா? ஆண்டவரின் கொடைகளை நினைக்கின்றேனா? இறைவாக்குகளைக் கேட்பதற்கு என் இதயத்தைத் திறக்கின்றேனா? நான் இப்படி நடப்பதற்குத் தயாரா? அல்லது பயப்படுகிறேனா? சட்டம் என்ற கூண்டில் என்னையே முடக்கிக்கொள்வதை விரும்புகிறேனா? போன்ற கேள்விகளை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, தந்தை ஆபிரகாம் போன்று, கடவுளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கின்றேனா? என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ளுமாறு மறையுரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.