2016-05-30 16:07:00

திருத்தந்தை : பணிபுரிபவர்கள் இயேசுவை அறிவிக்கின்றனர்


மே,30,2016. யார் யார் இயேசுவை அறிவிக்கின்றார்களோ, அவர்கள், பணிபுரிவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் மற்றும், யார் யார் பணிபுரிகின்றார்களோ, அவர்கள் இயேசுவை அறிவிக்கின்றார்கள் என்று, பல நாடுகளின் தியாக்கோன்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், நிரந்தரத் தியாக்கோன்கள் யூபிலி விழாவை  இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதராகவும், பணியாளராகவும் இருப்பது என்பது, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது என்றும் கூறினார்.

தியாக்கோன்கள் தங்களை எவ்விதம் வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றியும்,  தியாக்கோன்களுக்கு இருக்க வேண்டிய மூன்று கூறுகளாகிய, எதற்கும் தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இருத்தல், தாழ்மை, நலமான இதயம் ஆகியவை குறித்தும் விளக்கினார் திருத்தந்தை.

பல நாடுகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தியாக்கோன்கள் மற்றும் திருப்பயணிகளுக்கு மறையுரையாற்றிய திருத்தந்தை, தியாக்கோன்கள் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வையும், நேரத்தையும் செலவழிப்பதற்கு தாராளத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பணியாளர் என்பவர், தனது திட்டங்களுக்கு அடிமையாக இருக்கமாட்டார், ஆனால், எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எப்போதும் தன்னைத் தயாராக வைத்திருப்பார் என்றும், தியாக்கோன்கள், பங்குகளின் காலஅட்டவணையைப் புறம்தள்ளி, மக்களுக்குப் பணிவிடை செய்வதற்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாழ்மைப் பண்பும், இயேசுவோடு தொடர்ந்து உரையாடல் நடத்துவதிலிருந்து கிடைக்கும் நலமான இதயமும் தியாக்கோன்களுக்கு அவசியம் என்றும் தனது மறையுரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.