2016-05-30 16:02:00

நாம் நம் பூமியின் பாதுகாவலர்களே தவிர, முதலாளிகள் அல்ல


மே,30,2016. "நாம் நம் பூமியின் பாதுகாவலர்களே தவிர, முதலாளிகள் அல்ல, எனவே, கடவுள் படைப்பின் விலைமதிப்பற்ற கொடையைப் பாதுகாப்பதற்கு, நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொறுப்பு உள்ளது" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இத்திங்களன்று வெளியாயின.

மேலும், அருள்பணியாளர்களின் யூபிலி விழாவாகிய ஜூன் 3, வருகிற வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு நிகழ்வாக, அருள்பணியாளர்களின் யூபிலி விழா, இயேசுவின் திருஇதய விழாவாகிய ஜூன் 3ம் தேதியன்று நிறைவடைகிறது.

ஜூன் 01, வருகிற புதனன்று, அருள்பணியாளர்களின் யூபிலி விழாவின் மூன்று நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகும். அன்று காலையில், உரோம் நகரின் மூன்று யூபிலி ஆலயங்களில், திருநற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருளடையாளம், மாலையில் புனிதக் கதவுக்குப் பவனியாகச் செல்லுதல் ஆகியவை நடைபெறும்.

ஜூன் 02, வியாழனன்று, அருள்பணியாளர்களின் ஆன்மீகத் தியானத்தில் திருத்தந்தையும் கலந்துகொண்டு, காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரை மூன்று தியான உரைகள் வழங்குவார்.

இன்னும், வருகிற ஞாயிறன்று, 17ம் நூற்றாண்டு அருள்பணியாளர் இயேசு மரியின் ஸ்தனிஸ்லாஸ், கடந்த நூற்றாண்டில், Bridgettine சகோதரிகள் சபையை நிறுவிய, சுவீடன் நாட்டு அருளாளர் Maria Elizabeth Hesselblad ஆகிய இருவருக்கும் புனிதர் பட்டம் வழங்கும் திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.