2016-05-31 11:06:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 24


“இவ்வுலகத்தில் உங்களை எது அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது?” என்று ஒரு முறை தலாய்லாமா அவர்களிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில், நமது விவிலியத் தேடலை இன்று ஆரம்பித்து வைக்கிறது.

"இவ்வுலகில் என்னை அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது மனிதர்களே. அவர்கள் தங்கள் உடல்நலனைத் தியாகம் செய்து பணம் திரட்டுகிறார்கள். பின்னர் திரட்டிய பணத்தைத் தியாகம் செய்து உடல்நலனை மீண்டும் பெற முயற்சி செய்கிறார்கள்.

எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் மனிதர்கள் நிகழ்காலத்தை அனுபவிக்காமல் போகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை... எதிர்காலத்திலும் வாழ்வதில்லை.

இறக்கவே போவதில்லை என்ற கற்பனையில் மனிதர்கள் வாழ்கிறார்கள்... இறுதியில் வாழாமலேயே இறந்து விடுகிறார்கள்." என்று தலாய்லாமா சொன்னார். வெகு ஆழமான வார்த்தைகள்... நலமளிக்கும் புதுமைகள் பற்றி சிந்தித்துவரும் நமது தேடலை இன்று துவக்கி வைக்க, பொருத்தமான வார்த்தைகள். நற்செய்தியாளர் லூக்கா பதிவுசெய்துள்ள புதுமைகள் வரிசையில், இன்று, முடக்குவாதமுற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் நிகழ்வில் நம் தேடல் ஆரம்பமாகிறது.

பொதுவாகவே, இயேசு ஆற்றியப் புதுமைகளை அவருடைய இறை வல்லமை வெளிப்படும் அருங்குறிகள் என்ற கோணத்தில் பார்ப்பது நம் வழக்கம். அதே நேரத்தில், இயேசு அந்தப் புதுமைகைளை ஆற்றியபோது இருந்த சூழ்நிலை, அந்தப் புதுமையில் பங்கு பெற்றவர்கள் ஆகியவைப் பற்றியும் சிந்திப்பது பயனளிக்கும். இந்த கண்ணோட்டத்துடன், இன்று நாம் சிந்திக்கவிருக்கும் புதுமையின் ஆரம்ப வரிகளை, லூக்கா நற்செய்தியிலிருந்து கேட்போம்.

லூக்கா, 5, 17-19

ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர்.

'இயேசு கற்பித்துக் கொண்டிருந்தார்' என்பதைக் கூறும் நற்செய்தியாளர் லூக்கா, இயேசுவைச்  சுற்றி, எளிய மக்கள் கூடியிருந்தனர் என்பதை சொல்லாமல் சொல்கிறார். அத்துடன், குணமளிக்கும் புதுமைகளின் வழியே வெளிப்பட்ட இயேசுவின் வல்லமை, பல இடங்களிலும் பேசப்பட்டு வந்தது. ஏராளமான எளிய மக்கள், தங்கள் வாழ்விலும் ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையோடு, ஏக்கத்தோடு இயேசுவைத் தேடி வந்தார்கள். இவர்களெல்லாம் வந்தது சரிதான். ஆனால், யூதேயாப் பகுதியில் உள்ள எல்லா ஊர்களிலிருந்தும், எருசலேமிலிருந்தும், பரிசேயர்கள், திருச்சட்ட ஆசிரியர்கள் வந்திருந்ததாக லூக்கா குறிப்பிடுகிறார். இவர்களுக்கு அங்கே என்ன வேலை?

ஓர் எடுத்துக்காட்டுடன் இதைப் புரிந்துகொள்ள முயல்வோம். மதுரை அல்லது திருநெல்வேலிக்கு அருகே உள்ள ஒரு சின்ன ஊரில் வாழும் ஒரு தச்சுத் தொழிலாளியிடம் அசாத்திய திறமைகள், சக்திகள் வெளிப்படுவதாகவும், அவர் வழியாக ஒரு சில நல்ல காரியங்கள் நடப்பதாகவும், அந்த ஊரை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் போகின்றனர் என்றும் செய்திகள் வருகின்றன என்று வைத்துகொள்வோம். விரைவில், அந்த ஊருக்கு, சென்னையிலிருந்து, அல்லது, டெல்லியிலிருந்து, அரசு அதிகாரிகளும், மதத் தலைவர்களும் போக வேண்டிவரும். இவர்கள் ஏன் அங்கு போக வேண்டும்? சம்பவங்களில் பங்கேற்கவா? பயன் பெறவா? இல்லை. அங்கு நடப்பதைப்பற்றி மேலிடத்திற்கு விவரங்கள் சொல்லவேண்டும், அல்லது, அந்த சம்பவத்தின் மையமாக இருப்பவர் எப்படிப்பட்ட ஆள், அவர் செய்யும் காரியங்கள் சட்டப்பூர்வமானவைதானா என்ற கேள்விகளுக்கு விடை தேடவேண்டும். இவையே, இவர்களின் முக்கிய நோக்கம். மேலிடத்தின் கை பொம்மைகள் இவர்கள்.

இவ்வாறு, எளிய மக்கள், பரிசேயர்கள், திருச்சட்ட ஆசிரியர்கள் என, இயேசுவைச் சுற்றி கூடியிருந்தவர்களிடம் பல்வேறு நோக்கங்கள் இருந்தன. இந்நேரத்தில், இன்னும் நான்கு பேர் அங்கு வந்து சேர்ந்தனர். ஒரு வகையில் சொல்லப் போனால், இவர்கள்தாம் இன்றையப் புதுமையின் நாயகர்கள்.

இந்த நான்கு நண்பர்களும் வெறும் ஆர்வக் கோளாறினால் அங்கு வரவில்லை. ஒரு தீர்மானத்தோடு வந்திருந்தனர். பல ஆண்டுகளாய் செயல் இழந்து படுக்கையில் இருக்கும் தங்கள் நண்பனைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு வந்திருந்தனர். தங்கள் நண்பனின் அவலமான நிலையைக் கண்டு, இதுதான் அவனுக்கு வந்த விதி என்று, அவன் வாழ்வையும், தங்கள் நம்பிக்கையையும், மூடிவிடாமல், அவனுக்கு என்றாவது ஒரு நாள், ஏதாவது ஒரு வழியில், நல்லது நடக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தவர்கள், இந்த நண்பர்கள். இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டனர். தங்கள் நண்பனைக் கொண்டு வந்தனர். வந்த இடத்தில், மீண்டும் ஒரு தடங்கல். அத்தடங்கலையும், அதற்கு அந்த நண்பர்கள் கண்ட தீர்வையும், நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம் விவரிக்கிறார்.

லூக்கா, 5, 19-20

மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டுபோக அவர்களால் முடியவில்லை. எனவே, அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

இயேசு இருந்த வீட்டில் அதிக கும்பல். அந்த கும்பலின் வெளிச்சுற்றில் நின்றவர்கள், பரிசேயர்களும், திருச்சட்ட ஆசிரியர்களும். அவர்களைக் கடந்து தங்கள் நண்பனைக் கட்டிலோடு வீட்டினுள் இருந்த இயேசுவிடம் கொண்டு போவதென்பது மிகவும் ஆபத்தானது. காரணம்? நோயாளி, கடவுளிடமிருந்து சாபம் பெற்றவன். அவனைத் தொட்டாலோ, அல்லது அவன் தங்களைத் தொட்டாலோ, தாங்கள் தீட்டுப்படுவோம் என்பதால், நோயாளி கூட்டத்திற்குள் வந்துவிட்டான் என்று கண்டுபிடித்தால் அவனுக்கு உரிய தண்டனை வழங்குவதிலேயே குறியாய் இருக்கும் கும்பல் இந்த பரிசேயர் கும்பல். இந்தக் கொடூரமான எண்ணங்களை இவர்கள் அடிக்கடி சொல்லியுள்ளதையும், அவற்றைச் செயல் படுத்தியத்தையும் பார்த்தவர்கள் இந்த நண்பர்கள். தங்கள் நண்பனை இவர்களின் சித்திரவதைக்கு உள்ளாக்காமல் இயேசுவிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்று கொஞ்ச நேரம் குழம்பினார்கள். திடீரென தோன்றியது, அந்த ஒளி. ஒரு புதுப்பாதை தெரிந்தது. இயேசு நின்ற இடத்திற்கு மேலிருந்த கூரையைப் பிரித்து, தங்கள் நண்பனை இயேசுவுக்கு முன்பு இறக்கினார்கள். இவர்களது நம்பிக்கையை ஒரு வெறி என்று கூட சொல்லலாம்.

கட்டிலை வீட்டின் கூரை மீது ஏற்றியது, ஓடுகளைப் பிரித்தது என, அவர்கள் செய்தது மிகவும் ஆபத்தான செயல்கள்.  இயேசு போதித்துக்கொண்டிருந்த வீடு ஒரு மாளிகை அல்ல, எளிய வீடு. அந்த வீட்டுக் கூரையின் மீது நான்கு, ஐந்து பேர் ஏறினால், கூரை முழுவதும் உடைந்துவிடும் ஆபத்து உண்டு. வீட்டின் கூரை முழுவதும் உடைந்திருந்தால்... கீழே இருந்த பலருக்கும், இயேசுவுக்கும் சேர்த்து ஆபத்து. இப்படி பல வகையிலும் ஆபத்து நிறைந்த செயலை அவர்கள் செய்தனர். இதைத்தான் வெறி என்று சொன்னேன்.

தலைக்கு மேலே வெள்ளம் போனபின், சாண் என்ன, முழம் என்ன என்ற வரிகள் நினைவிருக்கலாம். நம்பிக்கை இழக்கச் செய்யும் இந்த வரிகளை இன்னும் தொடர்ந்து சிந்திப்போம்... தலைக்கு மேல் போய்விட்ட வெள்ளத்தில் தத்தளிக்கும்போது,  கரை தெரிந்தால், எஞ்சியிருக்கும் வலிமை எல்லாம் கூட்டி கரையை அடைய மாட்டோமா? அப்படித்தான் இந்த நண்பர்களும்.... பல ஆண்டுகளாய் பற்பல வெள்ளங்களைச் சந்தித்தவர்கள் இவர்கள். இதோ கரை நெருங்கிவிட்டது. கூரை நெருங்கி விட்டது என்றும் சொல்லலாம். இந்த நேரத்தில் பின் வாங்கக்கூடாது. எப்படியாவது இயேசுவுக்கு முன்னால் தங்கள் நண்பனைக் கொண்டு செல்லவேண்டும். கொண்டு சென்றார்கள்.

லூக்கா நற்செய்தியின் 20ம் சொற்றொடரில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் நம்மை ஆழமாக சிந்திக்க தூண்டுபவை. "அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு..." ஆம்... கட்டிலில் கிடந்தவர் நம்பிக்கையை விட அவரைத் தூக்கிவந்தவர்கள் நம்பிக்கை, இயேசுவை அதிகம் கவர்ந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நோயுற்றவரை இயேசு குணமாக்குகிறார்.

இயேசுவின் பல குணமளிக்கும் நிகழ்வுகளில் குணமிழந்த தனி மனிதனுக்கு மட்டும் குணமளிக்காமல், சுற்றி நிற்கும் பலருக்கும் குணமளிக்கிறார், இயேசு. தொழுநோயாளியைத் தொட்டு குணமாக்கினார் என்று சென்ற வாரம் பார்த்தோம். அந்தத் தொடுதலினால், சுற்றி நின்றவர்களையும் இயேசு குணமாக்கினார். இன்று மீண்டும் இயேசு அதையே செய்கிறார். சூழ இருந்தவர்களை இயேசு குணமாக்கிய நிகழ்வை லூக்கா இவ்விதம் விவரித்துள்ளார்.

லூக்கா, 5, 20-26

அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், “கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என்று எண்ணிக்கொண்டனர். அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன? 'உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன' என்பதா, அல்லது 'எழுந்து நடக்கவும்' என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன்; நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!” என்றார். உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார். இதைக் கண்ட யாவரும் மெய்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், “இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பேசிக்கொண்டார்கள்.

அந்த முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, "குணம் பெறுக." என்று சொல்லியிருந்தால் போதுமானது. ஆனால், இயேசு அவரிடம், "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன." என்று கூறுகிறார். பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்வது இயேசுவுக்குக் கைவந்த கலையோ என்றுகூட நான் சில சமயங்களில் எண்ணுவதுண்டு.

ஆழமாக சிந்தித்தால்,  பிரச்சனைகளை வளர்ப்பதற்கல்ல... மாறாக,  பிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பதற்காக இயேசு எடுத்துக்கொண்ட முயற்சி இது என்பதை உணர்வோம்.. இயேசு முடக்குவாதமுற்றவரது உடலை மட்டும் குணமாக்க விரும்பவில்லை. அது முழு குணம் ஆகாது என்பது அவருக்குத் தெரியும். மாறாக, இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்த சமுதாயத்தின் மேல் அவர் வளர்த்துக்கொண்ட கசப்பு, வெறுப்பு என்ற பாவங்களையும் நீக்கி அவருக்கு முழு குணம் அளிக்கவே, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறினார்.

இயேசு அவருடைய பாவத்தை மட்டுமல்ல, சுற்றி நின்ற அனைவரது பாவங்களையும், முக்கியமாக முடக்குவாதமுற்றவருக்கு இதுவரை தவறான தீர்ப்புகள் அளித்து, அவரையும், தங்களையும், கட்டிப்போட்டிருந்த குருக்கள், பரிசேயர், மக்கள் எல்லாருடைய பாவங்களையும் இயேசு மன்னிக்கிறார். மன்னிப்பினால் உருவாகும் நன்மைகளை நாம் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.