2016-06-03 15:07:00

திருத்தந்தை : கடவுளின் பெயர் இரக்கம்


ஜூன்,03,2016. இரக்கமுள்ள கடவுளைச் சந்திப்பதன் அடையாளங்கள் மற்றும் கருவிகளாக இருங்கள், இரக்கச் செயல்களை நடைமுறைப்படுத்துங்கள், இரக்கத்தின் கலாச்சாரத்தை உருவாக்குங்கள் என்று, இவ்வியாழன் மாலை 4 மணிக்கு, உரோம் புனித பவுல் பசிலிக்காவில் கூடியிருந்த ஆறாயிரத்திற்கு மேற்பட்ட அருள்பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவின் நறுமணமும், அவரின் இரக்கத்தின் ஒளியும் என்ற தலைப்பில் தியானச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இரக்கத்தின் அடையாளங்களாக இருக்கவேண்டிய அருள்பணியாளர்களின் இரக்கச் செயல்கள் பற்றி விளக்கினார்.

ஏழைகள் மீது அக்கறை, ஒப்புரவு அருளடையாளத்தில் இரக்கப் பண்பை வெளிப்படுத்தல், இறைமக்களின் விசுவாச உணர்வோடு ஒன்றித்து, இரக்கத்தின் கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகியவை பற்றி எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மேலும், இவ்வியாழன் பகல் 12 மணிக்கு புனித மேரி மேஜர் பசிலிக்காவில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான அருள்பணியாளர்களுக்குத் தியானச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, அன்னை மரியா, இரக்கத்தின் பாத்திரம் மற்றும் ஊற்று என்றார்.

முதலில், அப்பசிலிக்காவில் மலர்க்கொத்தை அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்த   திருத்தந்தை, மரியா, தம்மை அண்டி வரும் அனைத்து மக்களிடமிருந்து எவ்வாறு நல்லதைக் கொணர்கிறார் என்று விளக்கினார்.

புனிதர்களில் பலர், பெரும் பாவிகளாக இருந்தனர் என்றும், அதுவே, அவர்களை, இரக்கத்தை அதிகமாகச் செயல்படுத்துபவர்களாக மாற்றியது என்றும் உரைத்த திருத்தந்தை, கடவுள் தொடர்ந்து மன்னித்துக்கொண்டே இருக்கிறார் என்றும் கூறினார்.

நம் வாழ்வு குறுகியது, இதில் ஏராளமான நல்ல காரியங்கள் செய்யவேண்டியிருக்கின்றது, எனவே காலத்தை வீணாக்காமல் கழுவாய் தேட வேண்டுமென்றும், கடவுளின் பெயர் இரக்கம் என்றும் கூறினார் திருத்தந்தை.

இவ்வியாழனன்று, உரோம் நகரின் புனித ஜான் இலாத்தரன், புனித மேரி மேஜர், புனித பவுல் ஆகிய மூன்று பசிலிக்காக்களில், “அருள்பணியாளர் இரக்கத்தின் திருப்பணியாளர்” என்ற தலைப்பில், மூன்று தியான உரைகள் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.