2016-06-06 15:45:00

இது இரக்கத்தின் காலம் : எப்போதும் உண்மையே பேச...


மகாத்மா காந்தி அவர்களின் பேரனும், எம்.கே.காந்தி அஹிம்சா நிறுவனத்தை ஆரம்பித்தவருமான முனைவர் அருண் காந்தி அவர்கள், ஒருமுறை, புவர்த்தோ ரிக்கோ பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது, தனது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

"அப்போது எனக்கு வயது 16. நான், தென்னாப்ரிக்காவின் டர்பன் நகருக்கு 18 மைல் தூரத்தில், எனது தாத்தா நிறுவிய நிறுவனத்தில், எனது பெற்றோர் மற்றும் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வந்தேன். கரும்புத் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்திருந்த அந்த இடத்தில் வேறு யாரும் குடியிருக்கவில்லை. எனவே, நகருக்குச் சென்று நண்பர்களைச் சந்திக்கவும், திரைப்படங்கள் பார்க்கவும் வாய்ப்புக் கிடைக்கும் தருணத்திற்காக ஏங்கியிருந்தேன். ஒருநாள் என் அப்பா, நகருக்கு ஒருநாள் கருத்தரங்கிற்குச் செல்ல வேண்டியிருந்ததால், என்னைக் கார் ஓட்டுமாறு கேட்டார். என் தாயும், மளிகைச் சாமான்கள் வாங்கி வரச் சொன்னார். அன்று காலையில் நகரை அடைந்தோம். காரைவிட்டு இறங்கியதும், அப்பா என்னிடம், மாலை ஐந்து மணிக்குப இந்த இடத்தில் நாம் சந்திப்போம், சேர்ந்தே வீட்டுக்குத் திரும்புவோம், அதற்குள், வாகனத்திற்குப் பெட்ரோல் போட்டுவிடு, இந்த இந்தக் கட்டணங்களையெல்லாம் செலுத்திவிடு என்று சொல்லிச் சென்றார். வேகமாக எனது வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, அருகிலிருந்த திரையரங்கிற்குச் சென்றேன். John Wayne திரைப்படத்தில் மூழ்கிய நான், திடீரென மணியைப் பார்த்தேன் மாலை 5.30. உடனே வேகமாக காரை ஓட்டிக்கொண்டுச் சென்றேன். அதற்குள் ஆறு மணியாகிவிட்டது. அப்பா அங்கே காத்திருந்தார். கொஞ்சம் பதட்டத்தோடு, ஏன் தாமதம்? என்றார். வாகனத்தைப் பழுதுபார்க்கச் சென்ற இடத்தில் நேரமாகிவிட்டது என்றேன். நான் பொய் சொல்வதைக் கண்டுபிடித்த அப்பா, என்னிடம் உண்மையைச் சொல்லுமளவுக்கு, உனக்கு என்மேல் நம்பிக்கை இல்லை, நான் உன்னை வளர்த்தமுறையில் எங்கோ தவறு நடந்துவிட்டது. 18 மைல்களும் நடந்தே நான் வீட்டுக்குச் செல்கிறேன், நீ அதுபற்றிச் சிந்தித்துப் பார் என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார். கருத்தரங்கிற்கு வந்த கோட், சூட்டுடன், இரவு நேரத்தில், செப்பனிடப்படாத சாலையில் நடந்தார். நானும் அவரைத் தனியே விட மனமில்லாமல், ஐந்தரை மணி நேரம், அவர் பின்னால், நான் சொன்ன பொய்க்காக அப்பா அனுபவித்த வேதனைகளைப் பார்த்துக்கொண்டே காரை ஓட்டிச் சென்றேன். அன்று தீர்மானித்தேன், இனிமேல் ஒருபோதும் பொய்யே சொல்ல மாட்டேன் என்று". 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.