2016-06-07 10:03:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 25


முடக்குவாதமுற்ற ஒருவருக்கு இயேசு நலம் வழங்கியப் புதுமையில் நம் தேடலை சென்ற வாரம் துவங்கினோம். இயேசு முடக்குவாதமுற்றவருடைய பாவத்தை மட்டுமல்ல, சுற்றி நின்ற அனைவரது பாவங்களையும், முக்கியமாக, முடக்குவாதமுற்றவர் இறைவனால் தண்டிக்கப்பட்டவர் என்று, தவறான தீர்ப்புகள் அளித்து, அவரையும், தங்களையும், கட்டிப்போட்டிருந்த குருக்கள், பரிசேயர், மக்கள் எல்லாருடைய பாவங்களையும் மன்னிக்கிறார். இயேசு வழங்கும் மன்னிப்பினால் உருவாகும் நன்மைகளை நாம் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம் என்று சென்ற விவிலியத்தேடலை நிறைவு செய்தோம். இன்று தொடர்கிறோம். அந்தப் புதுமையின் இறுதி வரிகளை, மீண்டும் ஒருமுறை நினைவுக்குக் கொணர்வோம்:

லூக்கா, 5, 24-26

இயேசு முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன்; நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!” என்றார். உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார். இதைக் கண்ட யாவரும் மெய்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், “இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பேசிக்கொண்டார்கள்.

பல பெரியக் கடைகளில் "பழுதடைந்த பொருட்கள்" என்று பலகையில் எழுதி, கடையின் ஓரத்தில் அப்பொருட்களை வைப்பார்கள். மிகக் குறைந்த விலை கொடுத்து, பழுதடைந்தப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இருந்தாலும், கடையின் அப்பகுதிக்குப் பெரும்பாலானவர்கள் போகக்கூட மாட்டார்கள். பழுதடைந்ததை விலை கொடுத்து வாங்குவது மதியற்றச் செயல் என்பது நம்மிடையே நிலவும் பொதுவான கருத்து.

ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த பொருட்களைத் தேடிச்சென்ற ஒருவரிடம், அவர் நண்பர், "அதுதான் பழுதடைந்திருக்கிறதே. அதை ஏன் வாங்குகிறீர்?" என்று கேட்டார். "வெளியில்தான் இது பழுதடைந்துள்ளது. உள்ளிருக்கும் பொருள் நன்றாகவே இருக்கிறது." என்று பதில் சொன்னார்.

இயேசு வாழ்ந்த காலத்தில், ஊரார் கண்களில் பழுதடைந்தவர்களெனக் கருதப்பட்ட பலர், சமுதாயத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தனர். இயேசு அவர்களைத் தேடிப் போனார். பழுதடைந்தவர்கள் பலர், அவரைத் தேடி வந்தனர். அவர்களில் ஒருவர்தான், நாம் சிந்தித்துவரும் புதுமையின் நாயகனான, முடக்குவாதமுற்ற மனிதர்.

கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பொத்துக்கொண்டு கொடுக்கும் என்ற பழமொழியை நாம் கேட்டிருக்கிறோம். இந்தப் புதுமையிலோ, கூரையைப் பொத்துக்கொண்டு, பழுதடைந்த ஒருவர் கட்டிலோடு இறக்கப்பட்டார். வீட்டுக்குள்ளிருந்து, குறிப்பாக, வீட்டுக்குள் நின்ற இயேசுவிடமிருந்து, மன்னிப்பும், குணப்படுத்தும் ஆற்றலும் பொங்கி எழுந்தன. அப்போது, அந்தப் புதுமை நிகழ்ந்தது. பல வருடங்களாய் கட்டிலில் முடங்கிப்போனவர், தட்டுத்தடுமாறி எழுந்தார். தன் கால்களில் அவர் உணர்ந்த வலிமை, உடல் முழுவதும், உள்ளம் முழுவதும் பரவியது. தன்னை இதுவரைச் சுமந்துவந்த கட்டிலை, அவர் சுமந்து வெளியே சென்றார். அவர் உள்ளே வருவதற்கு இடம் தராத அந்த கும்பல், குறிப்பாக, அவர் இயேசுவை நெருங்க முடியாமல் வழி மறைத்து நின்ற குருக்கள், பரிசேயர் கூட்டம், வியப்புடன், மரியாதையுடன் வழிவிட, அவர் கம்பீரமாய் வெளியே சென்றார். வீட்டின் கூரையைப் பிரித்து, தங்கள் நண்பரை இயேசுவுக்கு முன் இறக்கிவிட்ட நண்பர்கள், கூரைமீது நின்று இந்த அற்புதத்தைக் கண்டனர். அங்கிருந்தபடியே இயேசுவுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவசரமாய் இறங்கி வந்து, நண்பனுடன் மகிழ்வாக சென்றனர். போகும் வழியில், அந்தக் கட்டிலை, எல்லாரும் சேர்ந்து குப்பையில் எறிந்துவிட்டு போயிருக்க வேண்டும்.

"உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று இயேசு கூறிய சொற்கள், இந்த புதுமையின் அடித்தளமாக அமைந்தன. மன்னிப்பு பெறுவதாலும், தருவதாலும், மனிதர்கள் குணம் பெறுவர் என்பதை, யாராலும் மறுக்கமுடியாது. Karl Menninger என்பவர், புகழ்பெற்ற ஒரு மன நல மருத்துவர். நலம் பெற வேண்டி, பல நூறு பேர் Karl Menninger அவர்களின் மருத்துவமனையில் காத்திருப்பர். அவர், ஒரு நாள், தன் நண்பரிடம், "என் மருத்துவமனையில் படுத்திருக்கும் நோயாளிகளிடம், அவர்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்ற உண்மையை மட்டும் அவர்களை நான் நம்பவைத்துவிட்டால்... அவர்களில் 75 விழுக்காடு பேருக்கு நோய் நீங்கி, இன்றே வீடு திரும்புவர்" என்றார். ஆம் அன்பர்களே, Menninger சொன்னது, ஆழமான ஓர் உண்மை.

நாம் ஒவ்வொருவரும் மன்னிக்கப்பட்டுவிட்டோம் என்பதை மனதார நம்பினால், உலகில் எத்தனை பாரங்கள் குறையும்! மன்னிப்பு என்ற அமுதத்தை நாம் ஒவ்வொருவரும் பருகினால், நம் ஒவ்வொருவரையும் பல வகைகளில் வாட்டும் மன, உடல் நோய்கள் நீங்கும். நலம் பெருகும். இந்த நற்செய்தியை நாம் மனதார நம்பவும், பிறரை அந்த நம்பிக்கைக்கு அழைத்து வரவும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு தகுந்ததொரு தருணம். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மன்னிப்பைப் பற்றி சிந்திக்க, இரக்கத்தின் யூபிலி நமக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்குகிறது.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களும், முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களும் முதல் முறையாகச் சந்தித்தபோது, கிளிண்டன், அவரிடம், "நீங்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அமெரிக்காவில் அதிகாலை மூன்று மணி. அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியைக் காண, நான் என் மகளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பினேன்" என்று சொன்னபின், தன் மனதில் இருந்த ஓர் எண்ணத்தைத் தயக்கத்துடன் கூறினார்: "நீங்கள் அந்தச் சிறையில் இருந்து வெளியே வந்த நேரத்தில் பல TV காமிராக்கள் உங்களையேச் சுற்றிச் சுற்றி வந்தன. உங்கள் முகத்தை மிக நெருக்கமாய் அவர்கள் காண்பித்தபோது, அந்த முகத்தில் தெரிந்த கோபம், வெறுப்பு இவற்றைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்" என்று கிளிண்டன் தயங்கித் தயங்கிப் பேசினார்.

அவரது தயக்கத்தைப் புரிந்துகொண்ட நெல்சன் மண்டேலா அவர்கள், அவருக்குப் பதிலளித்தார்: "நான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது எனக்குள் பொங்கியெழுந்த கோபமும் வெறுப்பும் காமிராக்களில் பதியும்படி வெளிப்பட்டதை அறிந்து நான் வருந்தினேன். அந்தக் கோபம், வெறுப்பு எல்லாம் எங்கிருந்து வந்தன என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். அந்தச் சிறை வளாகத்தில் நான் நடந்தபோது, எனக்குள் எழுந்த எண்ணங்கள் இந்தத் திசையில் சென்றன: 'நெல்சன், உன் வாழ்வில் அர்த்தமுள்ளதென்று நீ நினைத்ததையெல்லாம் அவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். நீ வைத்திருந்த கொள்கை இறந்துவிட்டது. உன் குடும்பம் காணாமற் போய்விட்டது. உன் நண்பர்கள் கொலை செய்யப்பட்டனர். இப்போது இவர்கள் உன்னை விடுதலை செய்கிறார்கள். இதோ இந்தச் சிறைக்கு வெளியே நீ சந்திக்கப் போகும் உலகில் உனக்கென ஒன்றும் இல்லை' என்று எனக்குள் எழுந்த இச்சிந்தனைகள் கோபத்தையும், வெறுப்பையும் கிளறிவிட்டன. இதைத்தான் காமிராக்கள் படம் பிடித்தன. நல்லவேளை, அந்நேரத்தில் மற்றொரு குரலும் எனக்குள் ஒலித்தது: 'நெல்சன், கடந்த 27 ஆண்டுகள் நீ சிறைக்குள் அவர்கள் கைதியாய் இருந்தாய். ஆனால், உள்ளுக்குள் நீ சுதந்திர மனிதனாய் இருந்தாய். இப்போது சிறையை விட்டு வெளியேறும்போது, உன்னையே நீ வெறுப்பில் சிறைப்படுத்திக் கொள்ளாதே. அவர்களது கைதியாக மாறாதே' என்று அந்தக் குரல் எனக்குச் சொல்லித் தந்தது" என்று மண்டேலா அவர்கள், கிளிண்டன் அவர்களுக்குப் பதிலளித்தார்.

நெல்சன் மண்டேலா அவர்கள், தன் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுத்ததால், தன்னைச் சிறைப்படுத்தியவர்களை மன்னிக்க முடிந்ததால், தன் எஞ்சிய வாழ்நாட்களை சுதந்திரமாக வாழமுடிந்தது. 2013ம் ஆண்டு, தனது 96வது வயதில், இவ்வுலக வாழ்வை நிறைவு செய்த நெல்சன் மண்டேலா அவர்கள், உலகின் தலை சிறந்த மனிதர்களில் ஒருவராக இன்றும் போற்றப்படுகிறார். 27 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த அவர், வெளியே வந்தபோது, தன்னைச் சிறைப்படுத்தியவர்களை இனி ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தால், நெல்சன் மண்டேலா அவர்கள், தன் வாழ்நாளெல்லாம் வெறுப்பு என்ற சிறைக்குள் வெந்து போயிருப்பார். வரலாற்றில் ஒரு மாமனிதர் என்று தன் முத்திரையைப் பதிப்பதற்கு பதில், தன் உள்ளத்தில் பற்றியெரிந்த அந்த வெறுப்புத் தீயில் சாம்பலாகியிருப்பார்.

மன்னிப்பு பெறுவதும், வழங்குவதும், நாம் வாழ்வில் அடிக்கடி உணர்ந்துள்ள ஓர் அனுபவம். இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றைத் தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாது. இந்த நாணயத்தின் ஏதாவது ஒரு பக்கம் தேய்ந்து அல்லது, சிதைந்து போயிருந்தாலும், நாணயத்திற்கு மதிப்பிருக்காது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம்... மன்னிப்புடன் இணைபிரியாது வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளார் உருவாக்கிய புகழ்பெற்ற 'அமைதி செபத்தில்' நாம் காண்கிறோம்: "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்."

இயேசு இவ்வுலகில் வாழ்ந்த 33 ஆண்டுகளில் தன் சீடர்களுக்கு ஒரே ஒரு செபத்தை மட்டுமே சொல்லித் தந்தார் என்பதை நாம் அறிவோம். 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே' என்று துவங்கும் அந்த உலகப் புகழ்பெற்ற செபத்தில், "எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னியும்" (மத்தேயு 6:12) என்ற அர்த்தமுள்ள, அழகான வேண்டுதலைச் சொல்லித்தந்தார். மன்னிப்பு பெறுவதற்கு ஓர் அடிப்படை நிபந்தனையாக, மன்னிக்கும் மனம் நமக்கு இருக்கவேண்டும் என்பதை இயேசு இந்த செபத்தின் வழியே கற்றுத்தந்தார்.

மன்னிப்பை மையப்படுத்தி இயேசு சொல்லித்தந்த பல பாடங்களில், மூன்று பாடங்கள், உவமைகளாக நம்மை அடைந்துள்ளன. கடன்பட்டிருந்த இருவருக்கு அவர்களின் கடன்கள் மன்னிக்கப்பட்டன என்ற உவமையை லூக்கா நற்செய்தி, 7ம் பிரிவில் வாசிக்கிறோம். அதையொத்த உவமை, மத்தேயு நற்செய்தி, 18ம் பிரிவில் நாம் காணும் 'மன்னிக்க மறுத்த பணியாள் உவமை'. லூக்கா நற்செய்தி, 15ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 'காணாமற்போன மகன் உவமை', மன்னிப்பின் சிகரம் என்று புகழ்பெற்றுள்ளது. இந்த மூன்று உவமைகளில், 'மன்னிக்க மறுத்த பணியாள் உவமை' வழியே இயேசு சொல்லித்தர விழையும் பாடங்களைப் பயில முயல்வோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.