2016-06-08 18:02:00

பெருங்கடல்கள் தினத்திற்கு பான் கி மூன் செய்தி


ஜூன்,08,2016. நம் பெருங்கடல்களின் நலத்தைப் பாதுகாப்பதற்கு, அவைகளின் தற்போதைய நிலைமை பற்றியும், அவை மீது, மனிதரின் செயல்களும் காலநிலை மாற்றமும் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் அறிந்து, புரிந்திருப்பது இன்றியமையாதது என்று, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

ஜூன்,08 இப்புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக பெருங்கடல்கள் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், பெருங்கடல்கள் எல்லைகளற்றதாய்த் தெரிந்தாலும், அவற்றுக்கு, மனித நடவடிக்கைகளின் பாதிப்புக்களைத் தாங்கக்கூடிய திறன் வரையறைக்குட்பட்டதாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பெருங்கடல்களை வருங்கால அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்கு, இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றுரைக்கும் அவரின் செய்தி, பெருங்கடல்களின் கொடைகளை, வருங்காலத் தலைமுறைகளுக்கு, அமைதியாகவும், சமமாகவும் வழங்குவதற்கும், அவைகளைப் பாதுகாப்பதற்கும் நம்மையே அர்ப்பணிப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இப்பூமியில், 71 விழுக்காடு, அதாவது, 36 கோடி சதுர கி.மீ., கடல். மனிதர் சுவாசிக்கும் ஆக்சிஜனில், எழுபது முதல் எண்பது விழுக்காடு, கடல் மூலமாக கிடைக்கிறது. உலகில், பத்து கோடிப் பேர், உணவு மற்றும் வருவாய்க்கு, கடலை நம்பி உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும், எட்டு கோடி மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருள்கள் பெருங்கடல்களில் சேர்கின்றன. இது, 2020ம் ஆண்டுக்குள் பத்து மடங்கு அதிகரிக்கும். மேலும், 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமான டன்கள் எடையுள்ள 500 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பொருள்கள் கடல்களில் மிதக்கின்றன, என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகின்றது.

"நலமான பெருங்கடல்கள், நலமான பூமி" என்ற தலைப்பில் இவ்வாண்டு இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.