2016-06-08 16:05:00

மறைக்கல்வி உரை : கானாவூர் புதுமை: இரக்கத்தின் முதல் அடையாளம்


ஜூன்,01,2016. இப்புதனன்று இத்தாலியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பெருமெண்ணிக்கையில் மக்கள் குழுமியிருந்ததால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வி உரை சந்திப்பு, தூய பேதுரு வளாகத் திறந்த வெளியிலேயே இடம்பெற்றது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பெருமெண்ணிக்கையில் குழுமியிருக்க, 'கானாவூர் புதுமை : இரக்கத்தின் முதல் அடையாளம்'  என்ற தலைப்பில் தன் மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் இடம்பெறும் நம் புதன் மறைக்கல்வி உரையில் இன்று, கானாவூர் திருமணத்தில், தண்ணீரைத் திராட்சை இரசமாக்கிய இயேசுவின் முதல் புதுமை குறித்து நோக்குவோம்.  இத்தகைய புதுமைகளை, புனித யோவான், 'அடையாளங்கள்' என்றே அழைக்கிறார், ஏனெனில், இவைகளின் வழியாக இயேசு, இறைத்தந்தையின் இரக்கம்நிறை அன்பை வெளிப்படுத்துகிறார். திருமணக் கொண்டாட்டத்தின்போது, இத்தகைய ஒரு நிகழ்வை இயேசு தேர்வு செய்தது, இப்புதுமைக்கு ஓர் ஆழமான அர்த்தத்தைக் கொடுப்பதாக உள்ளது.

இப்புதுமையானது, அவர் துவக்கி வைக்க வந்த புதிய உடன்படிக்கையின் அடையாளமாக உள்ளது. இயேசுவை மணமகனாகவும், திருஅவையை மணமகளாகவும் கொண்டு சிறப்பிக்கப்படும் விருந்தை, அதாவது, இறுதி காலத்திற்கென வாக்களிக்கப்பட்ட விருந்தை இது குறித்து நிற்கிறது. வழிபாட்டோடு தொடர்புடைய தூய்மைப்படுத்தலுக்கென வைக்கப்பட்டிருந்த தண்ணீரை, புது திராட்சை இரசமாக மாற்றுவதன் வழியாக, அவரே சட்டம் மற்றும் இறைவாக்குகளின் நிறைவாக்கம் என்பதை காட்டுகிறார் இயேசு. 'அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என அன்னை மரியா, பணியாளர்களுக்குக் கட்டளையிடுவது, திருஅவையின் வாழ்வைத் திட்டமிட உதவுவதாக உள்ளது. இறைவனின் மீட்பளிக்கும் காயங்களிலிருந்து புது இரசத்தையும் புது வாழ்வையும் பெறவும், இறைவனுக்கான நம் அன்பைப் புதுப்பிக்கவும் நாம் தொடர்ந்து அழைக்கப்பட்டுள்ளோம். புதிய, நித்திய உடன்படிக்கையின் திருமண விழாவின் மகிழ்வில் பங்குபெறும் வகையில், நாம் இறைக்குடும்பத்தின் அங்கத்தினர்களாக, விசுவாசத்தில் நாம் இயேசுவின் அருகே அழைக்கப்படுவதை, இந்த கானாவூர் திருமணப் புதுமை நமக்கு நினைவூட்டுகிறது.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை, இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, தன் ஆசீரையும் வழங்கினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.