2016-06-09 15:48:00

உரோமையில் தங்கும் முதல் திருப்பீட மலேசியத் தூதர் சந்திப்பு


ஜூன்,09,2016. “நம்மால் ஒத்துழைக்க முடிந்த மற்றும் நாம் ஒத்துழைக்க வேண்டிய மனிதச் சமூகங்களின் அடிப்படை விழுமியங்களை நாம் ஏற்க வேண்டும்”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியாயின

மேலும், தங்களின் பணிக்காலத்தை நிறைவு செய்யும் இஸ்ரேல் தூதர் Zion Evrony, போலந்து தூதர் Piotr Nowina-Konopka உட்பட சில திருப்பீட அதிகாரிகளையும் இவ்வியாழனன்று தனித்தனியே சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோமையில் தங்கும், திருப்பீடத்துக்கான முதல் மலேசியத் தூதர் Tan Sri Bernard Giluk Dompok அவர்களிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழையும் பெற்றார்.

Sabah மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய Dompok அவர்கள், மலேசியாவின் தொழிற்சாலை மற்றும் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றியவர். கத்தோலிக்கப் பள்ளிகளில் பயின்ற இவர், 2011ம் ஆண்டில், திருப்பீடத்திற்கும், மலேசியாவுக்கும் இடையே துதரக உறவுகள் உருவானதில் முக்கிய பங்காற்றியவர்.

இன்னும், தங்களின் திருமண பொன்விழாவைச் சிறப்பித்த தம்பதிகளுக்கு, இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் வாழ்த்து தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மறைக்கல்வியுரையைத் தொடங்குவதற்கு முன்னர், இந்நிகழ்வில் கலந்துகொள்ளும், திருமண வாழ்வில் ஐம்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள தம்பதியர் குழுவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன், தம்பதியரே, உங்களின் சான்று வாழ்வுக்கு மிக்க நன்றி, புதுமணத் தம்பதிகளுக்கு, நீங்கள் அழகான எடுத்துக்காட்டுகள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.