2016-06-10 16:15:00

இந்தியாவில் 2015ல் சாலை விபத்துகளில் 1,40,000 பேர் பலி


ஜூன்,10,2016. இந்தியாவில் 2015ம் ஆண்டில் சாலை விபத்துகளில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர், இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட 4.6 விழுக்காடு அதிகம் என்று, இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

“சாலை விபத்துகள் 2015” என்ற தலைப்பில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் Nitin Gadkari அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஐந்து இலட்சத்துக்கு அதிகமாக நடந்த சாலை விபத்துகளில் பலியானவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 15க்கும் 34 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்விபத்துகளில் ஒவ்வொரு நாளும் 400 பேர் பலியாகின்றனர் எனவும், ஒரு மணி நேரத்தில் 57 விபத்துக்கள் நடைபெறுகின்றன, அவற்றில் 17 பேர் வீதம் உயிரிழக்கின்றனர் எனவும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட விபத்துகளும், மரணங்களும் ஏற்படுகின்றன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில், நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில், 14% அதாவது 69,059 சாலை விபத்துகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. இவற்றில் 15,642 பேர் பலியாகியிருக்கின்றனர். மாதம் ஒன்றுக்கு 1,300 பேர் என்றும் தமிழகத்தில் சாலை விபத்துகளில் பலியாகியிருக்கின்றனர்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.