2016-06-13 16:43:00

ஒர்லாண்டோ படுகொலையில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்


ஜூன்,13,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஃபுளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகர கேளிக்கை விடுதியில் இடம்பெற்ற தாக்குதலை, வன்முறைப் படுகொலை மற்றும் உணர்வற்ற வெறுப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டு, இது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடச் செய்தித் தொடர்பக இயக்குனர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், இது, அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான படுகொலை துப்பாக்கிச்சூடு என்றார்.

இத்தாக்குதல், திருத்தந்தைக்கும், மற்ற அனைவருக்கும் ஆழ்ந்த வேதனையை அளித்துள்ளது என்றும், இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு திருத்தந்தை தனது செபத்தையும், பரிவன்பையும் தெரிவிக்கிறார் என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

மேலும், அமெரிக்க ஆயர்களும், தங்களின் கண்டனங்களையும், பலியானவர்களின் குடும்பங்களுக்குச் செபங்களையும் தெரிவித்துள்ளனர்.

ஒர்லாண்டோ நகரில், ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக Pulse nightclub என்ற கேளிக்கை விடுதி செயல்படுகிறது. அங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர் சரமாரியாகச் சுட்டார். இதில் குறைந்தது ஐம்பது பேர் பலியாகினர் மற்றும் 53 பேர் படுகாயம் அடைந்தனர்.

முதல் கட்ட விசாரணையில், தாக்குதலை நடத்திய நபர் புளோரிடா மாநிலம் போர்ட் செயின்ட் லூஸி நகரைச் சேர்ந்த Omar Mateen என்பதும், அவர் தனது உடலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைக் கட்டியிருந்துள்ளார், அதிநவீன தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.