2016-06-14 13:11:00

இது இரக்கத்தின் காலம் : உறுப்பு தானம், மன்னிப்பின் சிகரம்!


2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இரமதான் பண்டிகை காலத்தில், Ahmed Khatib என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன், இஸ்ரேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மைத் துப்பாக்கியை, உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த இஸ்ரேல் வீரர்கள் Ahmedஐச் சுட்டனர். தங்கள் தவறை உணர்ந்ததும், இஸ்ரேல் வீரர்கள், உடனே, அச்சிறுவனை, இஸ்ரேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச்சென்றனர். அவனது பெற்றோரையும் அழைத்துச் சென்றனர். Ahmedஐக் காப்பாற்ற முடியவில்லை. அந்நேரத்தில் அந்தத் தாயும், தந்தையும் அற்புதம் ஒன்றைச் செய்தனர். அவர்கள் இருவரும் Ahmedன் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தனர். அவர்கள் அந்த உறுப்பு தானத்தை இஸ்ரேல் பகுதியில் இருந்த மருத்துவமனையிலேயே செய்ததைக் கேள்விப்பட்ட பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் கோபமடைந்தனர். தங்கள் மகனைக் கொன்றது, இஸ்ரேல் படை என்று தெரிந்தும், அப்பகுதியிலேயே தங்கள் மகனின் உறுப்புக்களை அவர்கள் தானம் செய்தது, மன்னிப்பின் சிகரம்!

Ishmael, Ablah என்ற அந்த பெற்றோர் எளிய மக்கள். Ishamael அவர்கள், இரு சக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் ஒரு மெக்கானிக். அவ்விருவரும் செய்த உன்னதச் செயலைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, Ishmael சொன்னது இதுதான்: "என் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ரேல் மக்கள், இனிமேலாகிலும் சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த உறுப்புகளை நாங்கள் தானம் செய்தோம்."

பன்னாட்டு அரசுகள் கொண்டுவர முயன்றும் முடியாத பாலஸ்தீனிய, இஸ்ரேல் ஒப்புரவை, ஓர் எளிய மெக்கானிக் அவர்களின் குடும்பம், ஒரு சிறிய அளவில் கொண்டுவந்தது என்பது, மறுக்கமுடியாத உண்மை. மனித குலத்தின் மேல் நம் நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் நிகழ்ந்த இது போன்ற சம்பவங்கள் இரக்கத்தின் காலத்தில் தொடரும் என்று நம்புவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.