2016-06-15 15:58:00

புதன் மறைக்கல்வி உரை: இறையன்பை நோக்கி நம் கண்களைத் திறப்போம்


ஜூன்,15,2016. கடந்த வாரம் தன் யூபிலி மறைக்கல்வி உரையில், கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை இரசமாக்கிய புதுமையில் வெளிப்படுத்தப்பட்ட இறை இரக்கம் குறித்து விவரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், எரிகோவுக்குச் செல்லும் வழியில் இயேசு நிகழ்த்திய புதுமை குறித்து எடுத்துரைத்தார்.

விழியிழந்த ஒருவருக்கு எரிகோ செல்லும் வழியில் பார்வையை வழங்கிய இயேசுவின் புதுமை குறித்து இன்று நோக்குவோம்(லூக்.18:35-43). உயிர் வாழ்வதற்காக இரந்துண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தப் பார்வையிழந்தவர், இன்றும் சமூகத்தின் ஓரநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஏழை மக்களின் பிரதிநிதியாக உள்ளார். இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலத்தைக் கைக்கொண்ட பின்னர், உதவித் தேவைப்படும் மக்களுக்கு நாம் பாராமுகமாக இருக்கவோ, அல்லது இதயங்களைக் கடினமாக்கிக் கொள்ளவோ கூடாது என மோசே விடுத்த கடுமையான எச்சரிக்கையை (இணைச்சட்டம் 15) நமக்கு மீண்டும் நினைவூட்டுவதாக, வளம் கொழித்த இந்த எரிகோ நகர் உள்ளது. அந்த விழியிழந்தவரை கண்டும் காணாமல்போன, அல்லது அவரின் குரலை அடக்க முயன்ற மக்கள் கூட்டத்தைப்போல் அல்லாமல்,  இயேசு அவ்விடத்தில் நின்று, மக்களின் பார்வையை அந்த விழியிழந்தவரை நோக்கி திரும்ப வைத்து, அவரின் விசுவாசத்தை அங்கீகரிக்கும் விதமாக பார்வையை வழங்குகிறார். இவ்வாறு இயேசுவிடமிருந்து பார்வை பெற்ற அந்த மனிதர், இயேசுவின் சீடரானார் என, புனித லூக்கா நமக்கு எடுத்துரைக்கிறார். விழியிழந்திருந்தவருக்கு மட்டுமல்ல, அங்கிருந்த மக்கள் கூட்டத்திற்கும் கண் திறக்கிறது. இரக்கம் நிறைந்த இந்த சந்திப்பைக் காணும் அந்த மக்கள் இறைவனைப் புகழ்ந்து போற்றுகின்றனர். ஏழைகள் மீதான இறைவனின் அன்பு, மற்றும், விசுவாசத்துடன் தன்னை நோக்கி வரும் அனைவருக்கும் இறைவன் வழங்கும் குணப்படுத்தல் எனும் கொடையை நோக்கி நாமும், நம் கண்களையும் இதயத்தையும், இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் திறப்போமாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.